கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தலைமையில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போதே புதிய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை
இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய முறைமையின் போது புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய முடியும்.
விண்ணப்பதாரர்கள் இதை வீட்டிலேயே செய்யலாம். அவர்கள் கைவிரல் ரேகைகளை பதிவு செய்ய மாத்திரமே திணைக்களத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்ய ஒன்லைன் சந்திப்பு
இதேவேளை விண்ணப்பதாரர்களின் அவர்கள் கைவிரல் ரேகைகளை பதிவு செய்ய அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 50 முன் அலுவலகங்களை அமைக்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரருக்கு அருகில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று கைரேகையை பதிவு செய்ய ஒன்லைன் சந்திப்பு வழங்கப்படும்.
இந்த புதிய முறை நடைமுறைக்கு வரும்போது கடவுசீட்டு பெறுவதற்கு நிலவும் நெரிசல் குறையும்.
ஒன்லைனில் பணம் செலுத்துவதற்கும் கடவுச்சீட்டை வீட்டிற்கு பெற்றுக் கொள்வதற்கும் வசதிகள் செய்யப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.