இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றினால் மட்டும்போதாது: கோவிந்தன் கருணாகரம் ஆதங்கம் (Video)
ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றினால் மட்டும் போதாது இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வும் சர்வதேசத்திடம் இருந்து கிடைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பகுதியில் நேற்று (09.10.2022) நடைபெற்ற உழவர் சிலை திறப்புவிழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறை
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் இரண்டாவது விவசாய மாகாணமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் விவசாயம் பெரும்பான்மையான துறையாக காணப்படுகின்றது.
உண்மையில், ஒரு கிராமம் முன்னேறவேண்டுமானால் அந்தக் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் துடிப்புடன் செயற்படுவதோடு ஒற்றுமையுடனும் செயற்பட வேண்டும்.
அந்த வகையில் எமது கிராமத்தில் விளையாட்டுக் கழகம், கலைக் கழகம், இளைஞர் கழகம் ஆகிய மூன்றும் இனைந்து பல நிகழ்வுகளைச் செய்து வருவதை நானறிவேன்.
இங்கு நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளாக இருந்தாலும், கலை நிகழ்வுகளாக இருந்தாலும் ஒற்றுமையுடன் செயற்படுவதானது தேசத்துக்கு முன்னுதாரணமாகவுள்ளது.
உலகில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும், அதில் உழவர்களுக்காக நடைபெறும் போராட்டம் மேன்மையானது.
ஏனென்றால் அவர்கள் இல்லாவிட்டால், இந்த நாடே இயங்காது.அந்த வகையில் எமது மாவட்டம் கூட, இலங்கையில் விவசாய மாவட்டமாக திகழ்வது கண்கூடு.
பொருளாதார நிலை
மட்டக்களப்பு மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டமாகவும், 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ள மாவட்டமாகவும் விளங்குகிறது.
உழவர்களை நாம் போற்ற வேண்டும். இந்நிலையில் எமது நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது.
இதனால் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் அதிகரித்து முன்றாவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது.
இன்றைய பொருளாதார நிலைக்கு ராஜபக்சர்கள் தான் முழுக்காரணம் எனக் கூறப்பட்டாலும், சுதந்திரத்தின் பின்னர் ஆட்சி பீடம் ஏறிய அனைத்து ஆட்சியாளர்களுமே காரணமானவர்கள்.
இவர்கள் கடந்த 1956ஆம் ஆண்டு சிங்கள சட்டத்தை கொண்டு வந்து, எம்மை அடக்கி ஒடுக்கியதனால் அஹிம்சை வழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றமடைந்தது.
ஆயுதப் போராட்டம்
அந்த ஆயுதப் போராட்டத்தை அடக்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம் என்ற அறைகூவலுடன், எமது உரிமைப் போராட்டத்தை அடக்குவதற்காக கூடுதலான நிதியை வாரி இறைத்ததுதான் இன்றைய பொருளாதார நிலைக்கான அடித்தளமாகும்.
இந்த இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பெரும்பான்மை இன கட்சிகளும், பெரும்பான்மை இன சக்திகளும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
அதற்குப் பின் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆட்சியில்தான் எந்தவித வருமானத்தையும் தராத திட்டங்களுக்குப் பெருமளவில் கடன் பெறப்பட்டுள்ளது.
இக்கருத்தை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து தெரிவித்திருந்தார்.
கடந்த 1980க்கு முன்னர் பெறப்பட்ட கடன்கள் குறிப்பாக மகாவலி அபிவிருத்தி திட்ட உருவாக்கத்திற்காகப் பெறப்பட்ட கடனால் வடக்கு, கிழக்கிற்கு அநீதி இழைக்கப்பட்டாலும், தெற்கில் நெல் உற்பத்தியை அதிகரிக்கவும், மின் உற்பத்தியில் 60 சத வீதமானதை நீர்மின்சாரம் மூலமும் பெற வழிசமைத்துள்ளது.
ஆனால் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் தேவையற்ற விதத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், தாமரைக் கோபுரம் போன்ற எந்தவித வருமானமும் அற்ற திட்டங்களுக்காக பெருமளவு கடன்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பின்பு கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டின் 69 இலட்சம் சிங்கள பௌத்த மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தான் சிங்கள பௌத்த மக்களால் மட்டுமே தெரிவு செய்யப்பட்டதாக தனது பதவியேற்றத்தின் போது குறிப்பிட்டிருந்தார். ஆனால் இரண்டு வருடங்களின் பின்னர் அதே மக்கள் அவரைத் துரத்தியடித்திருந்தார்கள்.
அவர் எந்தவொரு நாட்டிலும் வசிக்க முடியாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இங்கு வந்து அரசியல் அநாதையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் அமைச்சர்கள்
அவர் விவசாய அசேதன உரத்தை உடனடியாக தடை செய்ததன் காரணத்தினால் தான் விவசாயிகள் இந்த கஷ்ட நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த உரங்கள் உரிய வேளைக்கு கிடைக்காமையால் எமது விவசாயிகள் துன்பத்தில் வாழ்கின்றனர்.
இந்த மாவட்டத்தில் இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருக்கின்றார்கள் கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் இருக்கின்றார்கள் இவர்கள் இந்த மாவட்ட நலனுக்காக செயல்பட வேண்டும்.
தெரிந்தோ தெரியாமலோ கடந்த 2004ஆம் ஆண்டு பின்பு இந்த மாவட்ட மக்கள் விகிதாசார அடிப்படையில் 4 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்திருக்கின்றார்கள்.
உரிமைக்கான இரண்டு பேரையும் அபிவிருத்திக்கென இரண்டு பேரையும் தெரிவு செய்திருக்கின்றார்கள். மாவட்ட அரசாங்க அதிபரிடம் அவசரக் கூட்டங்களை நாங்கள் கூட்டும்படி கூறினாலும் எங்களது கருத்துக்கள் அங்கே எடுத்துக்கொள்வதில்லை ஆனால் அரசாங்க தரப்பில் உள்ள உறுப்பினர்கள் கூறினால் அவர்களுடைய கருத்துக்களை மாத்திரம்தான் கேட்கின்றார்.
ஜெனிவாவில் இலங்கையினுடைய வெளிவிவகார அமைச்சர் வீரவசனம் பேசி கொண்டிருக்கின்றார். இன்று இலங்கை மக்கள் இருக்கும் பொருளாதார நிலைமைக்கு அன்னிய நாடுகள் மேற்குலக நாடுகள் குறிப்பாக இந்தியா இந்த நாட்டிற்கு கடந்த காலங்களிலும் தற்காலத்திலும் உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள் பொருளாதாரரீதியாக.
இந்தியா இன்னும் கூறுகின்றது இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமாக ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்தி பூரண அதிகாரப் பரவலாக்கல் நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கூறுகின்றார்கள்.
உண்மையாக அதிகாரப் பரவல் உடன் மாகாணசபை இயங்கும் ஆக இருந்தால் இந்த நாட்டிலே தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக அறிவிக்கப்படும் எமது காணிகள் எமது புராதன சின்னங்கள் என்பவற்றை பாதுகாக்க முடியும். இன்று எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட இருக்கின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று தான் எங்களுடைய உரிமையை பெறுவதற்காக இராஜதந்திர ரீதியில் சர்வதேசத்தை இன்று அணுகிக்கொண்டிருக்கின்றார்கள்.
எங்களது கோரிக்கைக்கு இணங்கி தான் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில் மேற்குலக நாடுகள் பிரித்தானியாவினால் கொண்டுவரப்படும் அந்த பிரேரணையை கடந்த காலங்களில் அது குற்ற பிரேரணையாக இருந்தாலும் தற்போது பொருளாதார குற்ற பிரேரணையாக உள்ளது.
இன்று அந்த பிரேரணைக்கு 193 நாடுகளில் 37 அனுசரணை வழங்கி இருக்கின்றார்கள் 20 நாடுகளின் ஆதரவுடன் அந்த பிரேரணை நிறைவேறி இருக்கின்றது.
இது நிறைவேறி இருந்தால் மாத்திரம் போதாது இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வு சர்வதேசத்திடம் இருந்து கிடைக்க வேண்டும்.
சர்வதேசம் எமது பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டுமானால் நாங்கள் பலமாக இருக்க வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் எதிர்காலத்தில் நாங்கள் ஒற்றுமையாக இன்று நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து இருக்கின்றோம்.
எதிர்வரும் காலங்களில் அந்த நான்கு பேரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும் அதற்கு நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எதிர்வரும் தேர்தல்களில் பங்காற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நாசாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன் மற்றும்
இரா.சாணக்கியன் ஆகியோர் பிரதம அதிதியாகவும் மண்முனை தென்எருவில் பற்று
பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன் சிறப்பு அதிதியாகவும் பிரதேசசபை உறுப்பினர்கள்
மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



