ஆதரவு வழங்காமல் பங்காளியாகுங்கள்! கூட்டமைப்பினருக்கு அழைப்பு
"ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு மாத்திரம் வழங்காமல் அதில் பங்காளியாக இணைய வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிமல் சிறிபால டி சில்வா, சர்வகட்சி அரசு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு
"பொருளாதாரம், அரசியல் என அனைத்துத் தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண சர்வகட்சி அரசு நிறுவப்பட வேண்டும் என்றும், அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவு வழங்கும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து அனைவராலும் வரவேற்கத்தக்கது.
ஆனால், ஜனாதிபதி தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசுக்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு மாத்திரம் வழங்காமல் அதில் பங்காளியாக இணைய வேண்டும். அப்போதுதான் தீர்வுக்காகக் காத்திருக்கும் மக்களுக்குச் சேவையாற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முழுமையான ஆதரவு
இதேவேளை, சர்வகட்சி அரசில் இணைவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் சர்வகட்சி அரசு ஒரு வழிமுறையாகும்.
அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக
இருக்கின்றது. ஆனால், எந்த வகையிலான ஆதரவை அல்லது பங்களிப்பை வழங்குவது என்பது
கட்சியாகவே தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.