மாகாண சபை அதிகாரங்களை கைப்பற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - பிரசாந்தன்
நாட்டின் ஜனாதிபதி 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக சகல கட்சிகளினதும் ஆலோசனைகளை கேட்டுள்ள நிலையில்,தற்போது இருக்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாகாண சபை அதிகாரங்களை கைப்பற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில்,இன்று (03.08.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில,
தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இழுத்தடிப்பு செயல்படுவதன் காரணமாக மிக நீண்ட காலமாக அவை இழுபட்டுக் கொண்டே செல்கின்றன.
13 வது திருத்தச் சட்டம்
மாகாண சபை முறைமையை ஒழுங்காக கையாளாததன் காரணமாக தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் அதனை அனுபவித்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் தற்போது இருக்கின்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 13 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை அதிகாரங்களை கைப்பற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
மாகாண சபை தேர்தல் தற்போது நடத்தப்படாமல் இருப்பதற்கு முழு காரணமும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்த தமிழரசு கட்சி தான்,13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி மாகாண சபை ஊடாக இருக்கின்ற அதிகாரங்களை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை நாம் முதலில் முன்னெடுக்க வேண்டும்.
ஜனாதிபதி பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடி இருந்தார். இவற்றில் காணி, கல்வி, சுகாதாரம், விவசாயம், போன்றவற்றை ஒன்றிணைந்து மத்திய அரசாங்கத்துடன் செயற்படுவது சம்பந்தமாகவும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தப் பொறிமுறையை நன்றாக வழிவகுத்து மாகாண சபைக்குரிய அதிகாரங்களை பெற்றுக் கொண்டு தமிழர் உரிய தீர்வினை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
