நாடாளுமன்றத்தில் கோட்டாபயவின் அரசாங்கத்துக்கு காத்திருக்கும் சவால்! குறிக்கப்பட்டது நாள்
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை 2022 ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது.
சர்வதேச நாணய நிதியம் கடந்த மார்ச் 25 அன்று இலங்கை தொடர்பான தமது ஆய்வு அறிக்கையை வெளியிட்டது,
அதில், நாட்டின் பொருளாதாரம் தொடர்பான ஆபத்துக்களை அது சுட்டிக்காட்டியிருந்தது. இலங்கை தாங்க முடியாத கடன் சுமைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க "நம்பகமான மற்றும் ஒத்திசைவான" மூலோபாயம் தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டுமென முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.
நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல அரசாங்கம் இணங்கியுள்ளமையால், அரசாங்கத்தின்; செயல்திட்டம் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.
இதனையடுத்து தற்போது விவாதத்துக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.