சமையல் எரிவாயு கொள்கலன்களை திரும்பப் பெறுமாறு நாடாளுமன்றில் கோரிக்கை
எரிவாயு கொள்கலன்கள் வெடிப்புகள் தொடர்வதால், எரிவாயு கொள்கலன்களை திரும்பப்பெறவேண்டும் என்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இந்த கோரிக்கையை இன்று விடுத்தார்.
ஹட்டன் நகரில் இன்று எரிவாயு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றமையை அடுத்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி எரிவாயு கொள்கலன்களில் சேர்க்கப்பட்டுள்ள கலவை காரணமாகவே எரிவாயு கொள்கலன் வெடிப்புக்கள் ஏற்படுகின்றமை தெரியவந்துள்ளதாக நளின் பண்டார குறிப்பிட்டார்.
எனவே அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எனினும் அறிக்கையை தம்மால் வெளியிடமுடியாது என்று அமைச்சர் கம்மன்பில குறிப்பிட்டார். நுகர்வோர் அதிகார சபையே அதனை வெளியிடவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்
