தமது தவறை ஏற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு. "தவறு செய்யவேண்டாம்"என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியது (Video)
”உண்மையை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்” என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாதீட்டுக் குழுநிலை விவாதத்தில் பங்கேற்ற, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன், கிளிநொச்சி உட்பட்ட ஏ 9 வீதியில் இராணுவ வாகனங்கள் உட்பட்ட வாகனங்களால் ஏற்படுத்தப்படும் விபத்துக்கள் குறித்து தகவல்களை வெளியிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட பெருந்தெருக்கள் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, விபத்துக்கள் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில், இராணுவ வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதாக மாத்திரம் தகவல்களை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இதன்போது ”உண்மைகளை ஏற்றுக்கொள்ள பழகவேண்டும்” என்று ஸ்ரீதரன் குறிப்பிட்டார்
இதேவேளை கிளிநொச்சி பிரதேசத்தின் போக்குவரத்து பிரச்சனைகளை உடனடியாக தீர்க்குமாறு நாடாளுமன்றத்தின் அமர்வுகளில் பங்கேற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தமக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அறிவித்தார்.
இதற்கிடையில் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் தமது கட்சி உட்பட்ட முன்னைய அரசாங்கமும் தவறு செய்திருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறிய ஸ்ரீதரன், இந்த அரசாங்கம் அதே தவறைச் செய்யாமல், உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

