சிங்களவர்களே கோட்டாபயவிற்கு எதிராக போராடும் நிலை
தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகளுக்குள்ளே ஒற்றுமை இல்லாததனால் ஒன்றித்து பயணம் செய்ய முடியாத ஒரு நிலை இருக்கிறதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம் தெரிவித்தார்.
ஓமந்தை பனிக்கர்புளியங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
சிங்களவர்களே கோட்டாபயவை விரட்டும் நிலை
இன்று நாடு பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டிருக்கின்றது. இதற்கு காரணம் இந்த ஆட்சியாளர்களே. இவர்களை நாங்கள் கொண்டு வரவில்லை. அறுபத்து ஒன்பது லட்சம் சிங்கள மக்கள் தான் கொண்டு வந்தார்கள். தற்போது அவர்களே கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு போக வேண்டும் என்று இன்று போராடி கொண்டிருக்கின்றார்கள்.
அதை விட எங்களுக்குள்ளே ஒரு குறை இருக்கின்றது. தமிழ் மக்கள், தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள் அல்லது தமிழ் கட்சிகள் எங்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாததனால் ஒன்றித்து பயணம் செய்ய முடியாத ஒரு நிலை. அதனை பயன்படுத்தி கொண்டு அரசாங்கம் எங்களை கூறு போடுகின்ற ஒரு நிலைமை. நாங்கள் பிரிந்து இருப்பதனால் எங்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத் தருவதிலே உள்ள ஒரு நிலைமை.
இப்படி பல்வேறு விடயங்களிலே எங்களுடைய ஒற்றுமையின்மை காரணமாக நாங்கள் அரசாங்கத்திற்கு ஒரு சவாலான விடயம் இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றது.
தமிழர்களின் ஒற்றுமையின்மை
பதின்மூன்றாவது திருத்த சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பின் பிரகாரம் மாகாணசபை முறைமை இந்த நாட்டிலே வந்தது. இங்கே மாகாணசபை ஆட்சி முறை இருக்கின்றது. அந்த ஆட்சி முறை வேண்டாம் என்று சொல்கின்றவர்களும், அதிகாரங்களோடு அந்த முறைமை இருக்க வேண்டும் என்று கூறுகின்றவர்களும் எங்களுடைய தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள்தான், தமிழ் மக்களுடைய கட்சியை சேர்ந்தவர்கள்தான்.
இந்த ஒற்றுமையின்மை காரணமாக தான் நாங்கள் எங்களுக்கான ஒரு அரசியல் தீர்வை பெற்று நிரந்தரமாக தமிழ் மக்களுக்கு அரசியல் விடிவை பெறுவதற்கு நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டிய ஒரு நிலைமை இருக்கின்றது.
அரசியலமைப்பு முற்றாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்
அரசியலமைப்பு முற்றாக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த எல்லோருடைய கோரிக்கை. ஆனால் காலத்திற்கு காலம் அரசியல் அமைப்பிலே திருத்தங்களை கொண்டு வருவதிலேதான் அரசாங்கம் முன் நிற்கின்றது.
அதேபோல்தான் 21 ஆவது திருத்த சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. சர்வதேச நாடுகள், நிதி வழங்குகின்ற அமைப்புகள் கூட இன்று இந்த 21 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்தினால், நிறைவேற்றினால் மட்டும்தான் உதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றன.
இங்கே இராணுவ கட்டமைப்புகள் இன்று இருக்கின்றன. இந்த இராணுவ கட்டமைப்புக்கள் இல்லாமல் இருக்க வேண்டும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இருக்க கூடாது.
நாடாளுமன்றத்திற்கு அந்த அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இன்று சர்வதேச நிதி நிறுவனங்கள் கோரிக்கையாக விட்டுக் கொண்டிருக்கின்றன.
21 ஆவது திருத்த சட்டம் கூட நேற்றைய தினம்தான் அமைச்சரவையிலே அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் என்ன நடைபெற போவதென்று தொடர்ந்து நாடாளுமன்றத்திலே உயர்நீதிமன்றங்கள் ஊடாக அதற்கான அனுமதிகள் கிடைக்குமா? இல்லையா? என்பது அரசியல் சார்ந்த விடயமாக இருக்கின்றது.
நிச்சயமாக தற்போது இருக்கின்ற கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் அதிகாரங்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு அதை தான் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கின்றாரே தவிர அதை நாடாளுமன்றத்தில் கொடுக்கின்ற நிலைமை இல்லை.
மக்கள் இன்று அபிவிருத்தியை கேட்கவில்லை. ஆகையால் அரசாங்கம் அபிவிருத்திகளை
புறம் ஒதுக்கி மக்களுக்கு பசியை, பட்டினியை போக்குவதற்கான நிவாரணங்களை
உடனடியாக வழங்க வேண்டும். வயிற்று பசியே இன்று தீர்க்கப்பட வேண்டிய
பிரச்சினையாக இருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.