நாடாளுமன்ற தேர்தலின் அவசியத்தை வலியுறுத்தும் மகிந்த தேசப்பிரிய
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆணை தற்போது இல்லை என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதை நிலை மற்றும் அரசாங்கத்துக்கு இருக்கும் மக்கள் ஆணை தொடர்பாக அவரது முகப்புத்தக பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவி்த்துள்ளார்.
மக்களின் நிலைப்பாடு
இந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”2019 ஜனாதிபதி மற்றும் 2020 பொதுத்தேர்தல்கள் மூலம் அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆணை தற்போது இல்லை.
இதனால் நாடாளுமன்ற தேர்தலை விரைவாக நடத்தி புதிய மக்கள் ஆணைக்கு இடமளிக்க வேண்டும்.
ஜனநாயகத்துக்கான பொதுத்தேர்தல்
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கு செலவழிக்க நிறுவனங்கள் தயாராக இருக்கும். ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இதேபோல், தேர்தல் ஒன்றை நடத்துவதாக இருந்தால் எந்த கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளாமல் அந்த பணிகளில் ஈடுபடுவதற்கு தயாராக இருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதுள்ள அரசியல் நிலைமையில் மக்களின் அபிப்பிராயத்தை கண்டறிவதற்கு பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்தது. அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தால் தேர்தலுக்கு ஏற்படும் செலவையும் குறைத்துக்கொள்ள முடியும்” என குறிப்பிட்டிருந்தார்.