இன்று கூடும் நாடாளுமன்றம்
செப்டெம்பர் மாத இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம்
இதற்கமைவாக நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 10.00 மணி முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 11.00 மணி முதல் 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் இன்று 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டு்ள்ளது.
இதன் பின்னர் மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்கான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும்
அத்துடன்,நாளை 24ஆம் திகதி புதன்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00மணி வரை தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அன்றைய தினம் மாலை 5.00 மணி முதல் 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை காலை 11.30 மணி முதல் 5.00 மணிவரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.
அத்துடன் அன்றையதினம் மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



