நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் காலப்பகுதியில் நாடாளுமன்றம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சபாநாயகர் உட்பட நாடாளுமன்ற பிரதானிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய தினத்தில் இருந்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்படும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும்.
மேலதிக படையினர் குவிப்பு
நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு மேலதிக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகத்தடுப்பு அணியினரை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருந்து விருந்தினர் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடத்தப்பட்ட கூட்டத்திற்கு முன்னர், நாடாளுமன்றத்தை சூழவுள்ள பிரதேசங்களில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தியவன்னா ஓயாவில் கடற்படையினரின் ரோந்து பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.



