அநுர அலையில் சிதறும் தமிழினம் - இனத்தை இழிவுபடுத்தும் சில தமிழர்கள்
அன்று கோட்டாபய(Gotabaya Rajapaksa) அலை போன்று இன்று அநுர(Anura Kumara Dissanayaka) அலையில் சிங்கள தேசம் மூழ்கிப் போயுள்ளது. இலங்கை அரசியலில் புதிய யுகம் ஏற்பட்டுள்ளது.
அநுர அலையில் தமிழர்களும் மூழ்கிப் போயுள்ளமை இன்று பேசும் பொருளாக மாறியுள்ளது.
இது மாற்றத்திற்கான ஆரம்பமா அல்லது தமிழினத்தின் அழிவிற்கான ஆரம்பமான என்பது பலரின் கேள்வியாக தற்போது மாறியுள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். அதன் தாக்கம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறுதிப் பெரும்பான்மை
நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி(NPP) வெற்றி பெறும் என அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிங்கள தேசத்தின் பாரம்பரிய கட்சிகள் தமது சுயத்தை இழந்து புதிய சின்னங்களில் தேர்தலை எதிர்கொள்கின்றமையே இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
அது எவ்வாறாயினும் தமிழர் தாயகப் பரப்பில் அநுர அலையின் தாக்கம் எவ்வாறு ஏற்பட்டது, இதன் பின்னணி என்பது குறித்து கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டியிடுகிறது. இதில் அதிகளவான தமிழர்களும் அநுர கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.
அதேவேளை தமிழர்கள் நலன்சார்த்த, தமிழ்தேசிய கோட்பாட்டுக்கு உட்பட்ட கட்சிகளும் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் இம்முறை தேர்தல் என்பது சிறுபான்மை மக்களுக்கு பெரும் பேரம் பேசும் சக்தியாக உருவெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
சிரேஷ்ட அரசியல்வாதிகள்
தென்னிலங்கையில் பிரதான கட்சிகள் பிளவுபட்டுள்ளதுடன், பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் மக்களால் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாரம்பரிய கட்சிகளை பின்புலமாக கொண்ட பலர் தோல்வி அடையக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பாரம்பரிய கட்சிகளுக்கு எதிரான தமது கடுமையான நிலைப்பாட்டை முன்வைத்தே தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது.
இவ்வாறான நிலையில் பொதுத் தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான 113 என்ற ஆசனங்களை பெறாத பட்சத்தில், அவர்கள் சிறுபான்மை கட்சிகளை இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன்போது பேரம் பேசுதலின் மூலம் ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்க முடியும்.
இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பலர் போட்டியிடுகின்றனர். அவ்வாறானவர்கள் வெற்றி பெற்றால், அது தமிழர்களுக்கு ஆபத்தானதொன்றாகவே மாறும். அவர்களின் வெற்றி தேசிய மக்கள் சக்தியின் ஆசனமாகவே அது மாறும்.
இதன்மூலம் தமிழர்கள் என்ற தனித்துவம் இழக்கப்படும். தமிழர்களின் நாடாளுமன்ற அங்கத்துவம் குறையும். இதன்மூலம் சர்வதேச ரீதியாகவும் நாம் தோல்வி அடைந்த சமூகமாக மாறுவோம்.
இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றார்கள். அவர்களுக்கு இன ரீதியான பிரச்சினைகள் இல்லை என்ற எடுகோளை நாமே சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் செயலாக இது மாறும்.
தமிழர்களின் அங்கத்துவம்
இதனை உணர்ந்து கொள்ளாத பல வேட்பாளர்கள் வாக்குகளை உடைக்கும் வகையில் சுயேட்சை குழுக்கள் என்ற பேரில் களமிறங்கியுள்ளனர். இது தென்னிலங்கை பாரம்பரிய கட்சிகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையாகவே மாறும்.
70 ஆண்டு வரலாற்றில் தமிழினத்தை புறம்தள்ளியே இன்று சிங்கள பாரம்பரிய கட்சிகள் தமது ஆட்சி இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். எந்தவொரு அரசாங்கமும் தமிழர் நலன்சார்ந்து செயற்பட போவதும் இல்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா, தமிழர்களின் ஆதரவு எமக்கு தேவையில்லை. அவர்கள் நலன்சார்ந்து நாம் செயற்பட வேண்டியதில்லை என்று பகிரங்கமாக சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் எந்த அடிப்படையில் தமிழ்தேசியத்தை புறந்தள்ளி, சிங்கள கட்சிகளின் சார்பில் தமிழர்களால் போட்டியிட முடிகிறது.
தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழினத்தை அடகு வைக்கும் செயற்பாடல்லவா இது. மூன்று தசாப்தகாலமாக எத்தனை உயிர்களை காவு கொடுத்து, சொத்துக்களை இழந்து இன்று எழுந்து நிற்கும் நாம், சுயநல அரசியலுக்காக தமிழ் தேசியத்தை கைவிடுவது நியாயமான செயலா.... இது எமக்காக உயிர்கொடை செய்தவர்களுக்கு செய்யும் துரோகமல்லவா...
தமிழ் தேசியம்
இந்த பொதுத் தேர்தல் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும். ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அசியல்வாதிகள் சுயநலத்திற்காக தமிழ் தேசியத்தை விற்கலாம்.. மாறாக தமிழ் மக்கள் என்றும் அந்த கொள்கை மாறாமல் வரலாற்று கடமையை ஆற்றுவோம். உணர்வுபூர்வமான இந்த மாதத்தில் ஒவ்வொரு தமிழர்களும் தமிழ் தேசியத்தின் பின் அணி திரளுவோம்.
கடந்த காலங்களில் தமிழ் தேசியம் என்ற போர்வையில் மக்கள் மத்தியில் பிரபல்யமான சில கல்வியாளர்கள், இன்று தமிழ் இளைஞர்களை மடைமாற்றும் செயற்பாட்டில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
இது குறித்து சரியான புரிதலுடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு தவறும் பட்சத்தில் புறக்கணிக்கப்பட்ட இனமாகவே நாம் இலங்கையில் வாழ வேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Vethu அவரால் எழுதப்பட்டு, 07 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.