நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (05.10.2022) நடைபெற்ற நிலையியல் கட்டளைகள் திருத்தம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஒரு கட்சியைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் நாடாளுமன்றத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளேன். இதில் குழு முறைமைகள் பலப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது.
இந்த குழுக்களின் ஊடாகவே முக்கியமான வேலைகளை செயற்படுத்த முடியும்.
நிலையியல் கட்டளை திருத்தங்கள் தொடர்பான விடயங்களில் அதனை நடைமுறை ரீதியில் திருத்த வேண்டும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள்
நாடாளுமன்றக் குழுக்கள், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கை இருக்க வேண்டும்.
அத்துடன் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில், தேசத்தின் தோல்வி என்பது பலவீனமான நாடாளுமன்றம் இருப்பது மட்டுமல்ல. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மற்றும் ஒட்டுமொத்த அமைப்பு முறைமையின் தோல்வியாகும்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு
கடந்த 75 வருடங்களாக ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கொண்டு வந்துள்ளோம்.
இந்த அரசியலமைப்பு படுதோல்வியை சந்தித்துள்ளது. மக்கள் ஆணையை நிராகரிப்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.
மக்களின் விருப்பம் புறக்கணிப்பு
அரசாங்கமே ஏற்றுக்கொண்டதால் தான் இந்த ஆணை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலில் பிரதமரையும், அதன்பிறகு ஜனாதிபதியையும் பதவி விலக வைத்தார்கள்.
எனவே, இந்த நாடாளுமன்றம் உண்மையில் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பது மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் ஒன்று.
இந்த கோரிக்கை இன்னும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது என தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி: ராகேஷ்
you may like this video...