பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை ஏன்..!: சிவசக்தி ஆனந்தன் கேள்வி
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற அதிகாரி மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கிக்கு, வடக்கு தமிழ் மக்கள் மீது திடீரென கரிசனை வருவதற்கு காரணம் என்ன என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் நேற்று (26.11.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கையில், வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு புலமைப்பரிசில் திட்டங்களுக்கான அழைப்பினை விடுத்ததுடன், தமிழ் மக்கள் மீதும் தமக்கு கரிசனைகள் இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வெளிப்படுத்தியுள்ளார்.
இராஜதந்திர முரண்பாடுகள்
உண்மையில் வடக்கிற்கான இவரது மூன்று நாட்கள் திடீர் பயணம் பல்வேறு திரைமறைவு நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டிருக்கலாம் என்ற கரிசனைகள் எமக்குள்ளன.
வடக்கை மையப்படுத்தி இராஜதந்திர முரண்பாடுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முனைகின்றாரா என்ற சந்தேகங்களும் உள்ளன.
இந்நிலையில் வடக்கு தமிழ் மக்கள் மீது கரிசனைகளைக் கொண்டவராக தன்னைக் காண்பிக்க விளைந்துள்ளார்.
தமிழ் மக்கள் மீது கரிசனை
இந்நிலையில், தமிழ் மக்கள் மீது கரிசனை கொள்பவராக இருப்பாராயின் நீதிக்காக போராடும் மக்களுக்காக ஐ.நா.வில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வாக்களிப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.
அதற்கும் முன்னதாக, தமிழ் மக்கள் இன்று நீதிக்காக போராடுவதற்கு காரணமாக இருக்கும் இலங்கை இராணுவத்திற்கு போரியல் ஆயுதங்களை அள்ளி வழங்கி மனித உரிமைகளை மீறிய போருக்கு காரணமாக இருந்திக்க கூடாது.
இவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுத்ததன்
பின்னர் வடக்கு மக்கள் மீது கரிசனை கொள்வதென்பது வேடிக்கையான விடயமாக உள்ளது
என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
