பாகிஸ்தானில் அதிகரிக்கும் பதற்றம்! வீடியோ வெளியிட்டு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான்
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய பொலிஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் அவரின் ஆதரவாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இம்ரான் கானுக்கு ஆதரவாக அவரது வீடு முன்பாக திரளும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகியதை அடுத்து, கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸார் தாக்குதல்
இதன்போது, போராட்டக்குழுவில் இருந்த சிலர் பொலிஸாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கல் வீச்சு தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் டிஐஜியும் காயம் அடைந்துள்ளார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொரிஸாரினால் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான்
இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் இம்ரான் கான் தமது சமூக ஊடக பக்கங்களில் சில காணொளிகளை வெளியிட்டுள்ளார். அதில், தமது ஆதரவாளர்கள் பெருமளவில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
"நான் கைது செய்யப்பட்ட பிறகு, தேசம் அமைதியாகி விடும் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள், அவர்களின் எண்ணம் தவறு என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதிப்படுத்த எல்லோரும் வெளியே வந்து போராடுங்கள்" என்று அந்த காணொளியில் பேசியுள்ளார்.
اپنی قوم کو میرا پیغام ہے کہ پوری ہمت و استقامت سے کھڑی ہو اور حقیقی آزادی و قانون کی حکمرانی کیلئے میدانِ عمل میں ڈٹ جائے! pic.twitter.com/ln4hLFu8Sp
— Imran Khan (@ImranKhanPTI) March 14, 2023
பிடிஐ கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபவாத் செளத்ரி கூறுகையில், இம்ரான் கானின் கைது நடவடிக்கைக்கு எதிராக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.
இம்ரான் கானுக்கு எதிரான வழக்கு
இரண்டு நீதிமன்றங்கள் முன்னாள் பிரதமர் தொடர்ந்து விசாரணைக்கு வராத காரணத்தால் அவருக்கு பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.
ஒன்று அரசு கருவூலத்தில் இருந்த பொருட்களை தமது வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக தொடரப்பட்ட வழக்கு. மற்றொரு வழக்கு பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பானது.
இதில் ஒரு வழக்கில் அவர் மீதான கைது நடவடிக்கைக்கு மார்ச் 16ஆம் திகதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது,