பாகிஸ்தானின் பெண் தீவிரவாதிக்காக, பணயக் கைதிகளை பிடித்து வைத்தவர் மர்ம மரணம்!
அமெரிக்காவில், பாகிஸ்தான் பெண் தீவிரவாதியை விடுவிக்க கோரி 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்தவர் உயிரிழந்தார்.
எனினும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற விடயம் இதுவரை தெரியவரவில்லை.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூதர்களின் வழிபாட்டு ஆலயமான பெத் இஸ்ரேலுக்குள் நேற்று பிரவேசித்த ஆயுதம் தாங்கிய ஒருவர், அங்கிருந்த 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்தார்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அதிகாரிகளை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக, கடந்த 2010-ம் ஆண்டு நியூயார்க் நீதிமன்றினால் 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை விடுவிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கையை முன்வைத்தார்.
இந்தநிலையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர், மரணமானதாகவும் அவரால் பிடித்துவைக்கப்பட்ட 4 பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் பணயக் கைதிகளை பிடித்து வைத்தவர் யார் என்ற தகவலும் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகவில்லை.





