இலங்கை கிரிக்கெட் அணிக்கு முழுப் பாதுகாப்பை அளிக்கும் பாகிஸ்தான் இராணுவ தளபதி
இஸ்லாமாபாத்தில் அண்மையில் ஏற்பட்ட பாதுகாப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு முழுப் பாதுகாப்பை அளிப்பதாகப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் உத்தரவாதம் அளித்துள்ளதாகப் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து இலங்கைத் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடப்பட்டதாகவும், இலங்கையின் ஜனாதிபதி நேரடியாகப் பாகிஸ்தான் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் மொகமட் நக்வி கூறினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை
அப்போது, ராணுவத் தளபதி உட்படப் பாகிஸ்தானின் உயர்மட்டத் தலைவர்கள் மூலம் இலங்கை அணியின் பாதுகாப்புக் கவலைகளுக்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியது.

இந்தப் பயணத்தைத் தொடர இலங்கை எடுத்த முடிவை மொஹ்சின் நக்வி பாராட்டி, இது பாகிஸ்தான் மீதான நம்பிக்கையையும் தைரியத்தையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
அண்மையில் நடந்த பயங்கரவாதச் செயல்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதற்கிடையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவை வழங்குவதாக இலங்கை உறுதியளித்துள்ளதாகச் சட்டத்துறை அமைச்சர் ஆசம் நசீர் தரார் செனட் சபையில் தெரிவித்தார்.

செனட் சபையும் சுற்றுப்பயணத்தைத் தொடரும் இலங்கையின் துணிச்சலைப் பாராட்டி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
எனவே, வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் கிரிக்கெட் சுற்றுப்பயணம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.