முல்லைத்தீவில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை (21) மூன்று இலட்சத்தி 15 ஆயிரம் கிலோ கிராம் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியில் அமைந்துள்ள நெல்சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியத்திலும், முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள களஞ்சியத்திலும்,ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள களஞ்சியத்திலும் இருந்து இந்த நெல் கொள்வனவு இடம்பெற்று வருகின்றது.
நெல் கொள்வனவு
நாட்டு சிகப்பு மற்றும் வெள்ளை கிலோ 120 ரூபாவிற்கும் சம்பா 125 ரூபாவிற்கும் கீரி சம்பா 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தமுறை சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் பச்சை நெல்லாகவே தனியாருக்கு அறுவடை இடத்தில் வைத்து விற்பனை செய்துவிட்டார்கள். காரணம் விவசாயிகளின் வயல் நிலங்களில் இருந்து நீண்ட தூரங்களிலேயே நெல்கொள்வனவு சபையின் களஞ்சிய சாலைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கான போக்குவரத்து செலவு காரணமாக இவ்வாறான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இதனை விட சில விவசாயிகள் நெல்லினை காயவைத்து நெல்சந்தைப்படுத்தல் சபைக்கு கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.
இது குறித்து நெல்லினை விற்பனை செய்து வரும் விவசாயிகள் தெரிவிக்கையில், இவ்வளவு காலமும் பச்சையாகத்தான் விற்பனை செய்துவந்துள்ள நிலையில் அரசாங்கம் விலையினை அறிவித்துள்ளது. இதனால் நெல்லினை காயவைத்து கொடுக்கின்றோம்.
அரசாங்கம் நடவடிக்கை
இந்த விலையானது விவசாயிகளுக்கு ஓரளவு நன்றாக இருக்கின்றது. கடந்த கால அரசாங்கத்தினை விட இப்போது ஓரளவு முன்னேற்றமாக இருக்கின்றது.இதற்கு முன்னர் அதிகளவில் தனியார் நெல்லினை கொள்வனவு செய்த பின்னர்தான் அரசாங்கம் நெல்லுக்கான விலையினை அறிவித்து நெல்கொள்வனவு செய்தார்கள்.
ஆனால் இப்போது நெல்லினை விற்பனை செய்துவருகின்றமை விவசாயிகளுக்கு திருப்தியாக இருக்கின்றது. ஆனால் இருந்தும் நெல்லுக்கு இன்னும் ஒரு பத்துரூபா விலை அதிகாசூரித்தால் நன்றாக இருக்கும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பச்சை நெல்லினையும் அரசாங்கம் கொள்வனவு செய்யவேண்டும்.பெருமளவான நெல்லு தனியாரிடம் சென்று விட்டது. இதனை மாற்றிஅமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் பசளைக்கான விலையினையும், கிருமி நாசினிக்கான விலையினையும் குறைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









