பி.சி.ஆர். பரிசோதனை குறைக்கப்படவில்லை! - இராணுவத்தளபதி விளக்கம்
நாட்டில் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று கோவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கமளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாளாந்த பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கம் இல்லை. தொற்று நோய் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டல்களின் அடிப்படையிலேயே, பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒருவருக்குக் கோவிட் வைரஸ் தொற்று அடையாளம் காணப்படும் போது, அவரது வீட்டில் அனைவரும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டனர். 14 நாட்களின் பின்னர் அவர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் போது, அவர்களுக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்படும் நிலை காணப்பட்டது.
இதன் காரணமாக, எதிர்காலத்தில் இதற்காக செலவு செய்யாமல், புதிய நோயாளர்களைக்
கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையில் சிறிது தளர்வு
ஏற்பட்டிருக்கலாம் என்றார்.