ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று! கிண்ணத்தை வெல்லப்போவது யார்!
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மோதிக்கொள்கின்றன.
குறித்த போட்டியானது இன்றையதினம் (26.05.2024) சென்னை சேப்பாக்கம் (Chennai Chepauk) மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான களிமண் ஆடுகளம் (Red Soil Pitch) இந்த போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆடுகளத்தில் சென்னை (CSK) மற்றும் பஞ்சாப் (PK) அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் ராகுல் சஹர் மற்றும் ஹர்ப்ரீட் ப்ரார் ஆகியோர் இணைந்து 8 ஓவர்கள் வீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்த களிமண் ஆடுகளம், விரைவாக காய்ந்து, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்தின் பிடிப்பு மற்றும் திருப்பத்திற்கு உதவுகிறது.
கொல்கத்தா அணி
இதனால், சுனில் நரைன் (Sunil Naraine) மற்றும் வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy) ஆகிய பலம் வாய்ந்த இரு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்ட கொல்கத்தா அணிக்கு பல சாதகங்கள் இருப்பதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டுவரும் சுனில் நரைன், முதல் பந்திலிருந்தே தனது அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்துகிறார்.
அத்துடன், தொடரின் ஆரம்பத்தில் மிட்ச்செல் ஸ்டார்க் சரியாக சோபிக்கவில்லை என்றாலும் இறுதியாக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகின்றார்.
ஆனாலும், ரஸல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை என்பது கொல்கத்தா அணிக்கு ஒரு பின்னடைவாகவே உள்ளது.
சன்ரைசர்ஸ் அணி
அதேவேளை, சன்ரைசர்ஸ் அணியின் முதன்மையான சாதகமாக அந்த அணியின் அச்சமற்ற துடுப்பாட்டமே உள்ளது.
இந்த துடுப்பாட்டத்தின் துணையுடன் சன்ரைசர்ஸ் சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் பெறப்பட்ட ஓட்டங்களான 287 ஓட்டங்களை இந்த ஆண்டு பதிவு செய்தது.
அதனையடுத்து, சன்ரைசர்ஸ் அணிக்கு உள்ள சாதகமாக அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் மற்றும் நடராஜன் ஆகியோரை கூறலாம்.
இந்த வருடம் நடராஜனுக்கு சிறப்பான வருடமாக அமைந்துள்ளதோடு அவர் 19 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.
மேலும், அணித்தலைவர் பட் கம்மின்ஸின் துல்லியமான மற்றும் தைரியமான தலைமைத்துவமும் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரும் சாதகமாக அமைந்துள்ளது.
அதேவேளை, ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதியில், சன்ரைசர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான சபாஸ் அஹமத் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் சிறப்பாக செயற்பட்டனர்.
எனினும், ஒரு நம்பகமான முழுநேர சுழற்பந்து வீச்சாளர் சன்ரைசர்ஸ் அணியில் இல்லை என்பது சேப்பாக்கம் போன்ற ஒரு மைதானத்தில் பாரிய பின்னடைவாக காணப்படுவதோடு வியாஸ்காந்த் (Viyashkanth) போட்டியில் இடம்பெறுவாரா என்பது சந்தேகமே.
மைதானத்தின் ஈரப்பதன்
அத்துடன், போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸில் மைதானத்தின் ஈரப்பதன் (Dew) அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சிரமத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஆனாலும், சென்னையில் நடைபெற்ற கடந்த போட்டியில் மைதானத்தின் ஈரப்பதன் பெரிதளவில் அதிகரிக்கவில்லை.
இது சன்ரைசர்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்ததோடு அதன் வெற்றியையும் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |