மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: ஆளுநரிடம் கோரிக்கை முன்வைப்பு
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களிடம் என்றுமில்லாதவாறு வாகன தரிப்பிட கட்டணமாக அதிக பணம் அறவிடப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை மகோற்ஷபமானது கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலயத்துக்கு செல்லும் பொதுமக்களின் வாகனங்களை தரித்து வைப்பதற்காக அதிகமான கட்டணங்களை தனி நபர்கள் சிலர் வசூலித்து வருவதாக பக்தர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல கூடிய அனைத்து பாதைகளிலும் வீதியோர வியாபாரிகள் போன்று சிலர் "வாகன தரிப்பிடம்" எனும் பதாதைகளை தனியார் காணிகளிலும், ஒழுங்கைகளிலும் காட்சிப்படுத்தியுள்ளதுடன், பலவந்தமாக பக்தர்கள் செல்லும் வாகனங்களை இடைமறித்து அடாவடித்தனமாக அதிக கட்டணங்களை வசூலித்து வருவதாகவும், அதற்காக பற்றுச் சீட்டுக்கள் எவையும் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
தனி நபர்களின் கட்டண அறவீடு
மேலும் மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கு 100 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையும், முற்சக்கர வண்டிக்கு 150 ரூபா தொடக்கம் 180 ரூபா வரையும் அறவிடப்பட்டு வருவதுடன், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு 200 ரூபா தொடக்கம் 350 ரூபா வரை கட்டணமாக அறவிடுப்படுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
வழமையாக ஆலய திருவிழாவின்போது ஆலய நிர்வாகமே வாகன தரிப்பிடங்களை ஒழுங்குபடுத்தும். ஆனால் இம்முறை தனிப்பட்ட நபர்கள் தங்கள் காணிகளை வழங்குவதன் மூலம் உயர் கட்டணங்களை கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஆலய நிர்வாகம், மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் அவர்களால் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பில் உடன் தலையிட்டு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகின்றமையும்
குறிப்பிடத்தக்கது.





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
