தோட்ட தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்கம்: அமைச்சர் ஜீவன் (Video)
மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கூட்டம் இன்று (31.08.2023) தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை முன்வைக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலாபப் பங்கீட்டு முறை
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதாரத்துக்கு 200 வருடங்களுக்கு மேலாக பங்களிப்பு வழங்கிவரும் பெருந்தோட்டத்துறையானது நாள் வேதன முறையில் இருந்து, இலாப பங்கீட்டு முறைமைக்கு மாற வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது.

இலங்கையில் வாழும் எமது இந்திய வம்சாவளி மக்கள் இங்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னும் நாள் வேதனத்தையே பெறுகின்றனர். இது அவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாக அமையாது.
எனவே, இலாப பங்கீட்டு முறையுடன் அவர்களையும் இந்த தொழில்துறையில் உற்பத்தியாளர்களாக மாற்றுவதே ஏற்புடைய நடவடிக்கையாக அமையும். இதற்குரிய வேலைத்திட்டமே எனது அமைச்சு ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொழிலாளர்களுக்காக காப்புறுதி திட்டம்
இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
வேலையின்போது குளவி கொட்டுதல் உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழப்பு சம்பவங்கள் கூட பதிவாகியுள்ளன. சிலர் அங்கவீனமடைகின்றனர். தற்போது தொழில்துறை மாற்றம் பற்றி பேசப்படுகின்றது.

ஆகவே, அரச அங்கீகாரத்துடன் தொழிலாளர்களுக்காக காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களை கௌரவிப்பதற்கான நாளொன்றை ஒதுக்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri