அரசியல் தலையீடற்ற மக்கள் சேவையே எமது இலக்கு..! மூதூரில் பிரதி அமைச்சர் உறுதி
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் நிலவிய கடும் புயல் காரணமாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று(12.05.2026) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அப்பகுதி மக்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்துள்ளார்.
நஷ்டஈடு வழங்கும் திட்டம்
மூதூர் பிரதேச செயலாளர் எம்.எச்.பினாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட 19 நபர்களின் சேத விபரங்களுக்கு அமைய மதிப்பீடு செய்யப்பட்ட காசோலைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
முன்னைய காலங்களில் அரச உதவிகள் மற்றும் நஷ்டஈடுகள் வழங்கப்படும் போது பல்வேறு அரசியல் தலையீடுகள் காணப்பட்டதை நாம் அறிவோம்.
ஆனால், எமது அரசாங்கத்தின் கீழ் தகுதியான பயனாளர்கள் எந்தவித அரசியல் பாகுபாடுமின்றி, அதிகாரிகளின் நேரடி கள விஜயம் மற்றும் வெளிப்படையான மதிப்பீடுகளின் ஊடாகவே தெரிவு செய்யப்படுகிறார்கள்.

மூதூர் பிரதேசங்களில் நிலவும் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக கூடிய கவனம் செலுத்திவருவதுடன் அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச செயலாளரிடம் பிரதி அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், மக்களுக்கான துரித சேவையை உறுதிப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி எடுத்துவரும் காத்திரமான முயற்சிகளுக்கு நாம் பலமாக இருக்க வேண்டும்.
மக்கள் நலத்திட்டங்கள்
ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி, இத்தகைய மக்கள் நலத்திட்டங்கள் தங்குதடையின்றி கிராம மட்டங்களுக்குச் சென்றடைவதை நாம் உறுதி செய்வோம்.
மேலும், புயலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களால் முறையாகக் கணக்கிடப்பட்டு, முழுமையான மற்றும் பகுதி அளவிலான பாதிப்புகளுக்கு அமைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை அனர்த்தம் நிகழ்ந்து குறுகிய காலப்பகுதிக்குள் அரசாங்கம் உரிய நஷ்டஈடைப் பெற்றுக் கொடுத்தமைக்காக பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஏனையோருக்கும் உரிய மதிப்பீடுகளின் அடிப்படையில் அடுத்தடுத்த கட்டங்களில் நஷ்டஈடுகள் வழங்கப்படும் என இதன்போது அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச அமைப்பாளர், கிளீன் ஸ்ரீலங்கா இணைப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள், மூதூர் பிரதேச செயலக நிருவாக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.