கனடா - ஒட்டாவா அறுவர் படுகொலை: சந்தேகநபர் தொடர்பில் வெளிவரும் மேலும் பல தகவல்கள்
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் வசிக்கும் இலங்கையர்கள் 6 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை இளைஞன் பற்றிய மேலும் பல தகவல்களை கனேடிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவனில் உள்ள அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்திருந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கனடாவில் கல்வி கற்கும் பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளைஞன் பற்றிய தகவல்
தற்போது அந்த இளைஞன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டாவா வரலாற்றில் மிக மோசமான படுகொலைச் சம்பவம் இது என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பிராங்க் டி சொய்சாவின் நடத்தை அண்மைக்காலமாக மாறியுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிராங்க் டி சொய்சாவின் அத்தையான அனுஷா டி சொய்சா கனடா ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மிகவும் நல்ல மனிதர்
"இந்த சம்பவம் என்னை உலுக்கியது, அந்த குடும்பம் அவரை மிகவும் சிறப்பாக நடத்தியது, அந்த குடும்பம் மிகவும் நல்ல குடும்பம், இதை கேட்டு நான் கல்லாகிவிட்டேன், என்னால் இன்னும் தூங்க முடியவில்லை'' '
எங்களுடனான எல்லா உறவுகளையும் துண்டித்துவிட்டார். எங்களுடனான எல்லா தொடர்புகளையும் அவர் தடுத்துவிட்டார். எங்கள் தொலைபேசி எண்களில் இருந்தும் சமூக ஊடகங்களில் கூட எங்களை அகற்றினார்.
இது போன்ற ஒன்றை நான் கனவில் கூட நினைத்ததில்லை.
மேலும், தனது சகோதரரின் மூத்த மகன் பிராங்க் டி சொய்சா 2 வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு வந்ததாகவும், அவர் மிகவும் அமைதியான இளைஞராகவும் மிகவும் நல்ல மனிதர் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பிராங்க் டி சொய்சா கனடாவுக்கு வந்த பின்னர் முதல் மாதம், அவர் தனது அத்தையான அனுஷா டி சொய்சாவுடன் அவரது வீட்டில் தங்கியிருந்தார்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |