கோட்டாபயவுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவு
மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சாட்சியமளிக்க அழைக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
அழைப்பாணை விடுக்குமாறு சட்டத்தரணிகளுக்கு அறிவித்த நீதிமன்றம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செல்லுப்படியற்றது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று முறைப்பாட்டாளர் தரப்பின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்துள்ளது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் காமினி அமரசேகர, யசந்த கோதகொட, ஏ.எச்.எம்.டி.நவாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போபகே, மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச சார்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை
எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை. இதனடிப்படையில், கோட்டாபய ராஜபக்சவுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்குமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு அறிவித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை சம்பந்தமாக அவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அன்றைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்
தனது உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியமளிக்க முடியாது எனவும் இதனால், யாழ்ப்பாணம் நீதவானின் உத்தரவை இடைநிறுத்தி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் கோரி கோட்டாபய ராஜபக்ச, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், தீர்ப்பை வழங்கிய சந்தர்ப்பத்தில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காரணத்தினால், அவரை சாட்சியமளிக்க அழைக்க முடியாது என தீர்ப்பளித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் கோட்டாபய ராஜபக்ச தற்போது ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியுள்ளதால், அவரை சாட்சியமளிக்க அழைக்க முடியும் என உத்தரவிடக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.





அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
