கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற உத்தரவு
கீரிமலை பகுதியில் வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினால் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
கீரிமலை பகுதியில் சுமார் 300 டிப்பர் அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவற்றை மீள அள்ளுமாறு வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விசேட கூட்டம்
கழிவுகளை மீள அள்ளுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்து, வலி. வடக்கு பிரதேச சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று(17) வியாழக்கிழமை நடைபெற்றிருக்க வேண்டிய சபை அமர்வை புறக்கணித்தனர்.

கடந்த 14ஆம் திகதி கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கூட்டம் நடத்துவதற்கு சபையில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கூட்டம் நடைபெறவில்லை எனவும் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, சபை அமர்வு நடைபெறாதமை தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் வலி. வடக்கு பிரதேச சபையினருடன் இணைந்து கீரிமலை பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டனர்.
கீரிமலை பகுதியில் கழிவுகள்
இதன் பின்னர், கொட்டப்பட்டுள்ள கழிவுகளை மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், குறித்த இடம் கழிவுகளை கொட்டுவதற்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது மற்றும் கொட்டப்பட்ட கழிவுகளை எவ்வாறு மீள அகற்றுவது என்பது தொடர்பான விரிவான அறிக்கையை நாளை வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறும் உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கீரிமலை பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்து, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தெல்லிப்பழை பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இந்த விவகாரம் தொடர்பில் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும் இது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.



