வவுனியா மாநகர சபையின் முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய உத்தரவு
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட நான்கு பேரை கைது செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல்போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் (30.06) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றில் முற்படுத்த அனுமதி
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய சிசீரிவி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொலிஸார், சம்பவம் தொடர்பாக முன்னாள் மேயர் உள்ளிட்ட சிலரை கைது செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை நேற்று (01.07) கோரியிருந்தனர்.

இதன்போது, பொலிஸாரின் கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்திய வவுனியா நீதவான் நீதிமன்றம் வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் சு.காண்டீபன் உட்பட நான்கு பேரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
அதில் பெண் ஓருவரும் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் தொடர்பாகவும் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.