கிழக்கு மாகாண மக்களை முழுமையான தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் பிள்ளையான்
கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஆணையை பெறும் நிர்ப்பந்தத்தில் நாம் உள்ளதோடு ஏனைய கட்சிகள் இதற்கான திட்டமிடலை மேற்கொள்ளவில்லை என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச செயற்குழு உறுப்பினர் த.நவனீதன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் ஆணை
மேலும் தெரிவிக்கையில், ”கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை மாற்றினால் மாத்திரமே கல்விப்புலத்தில் உள்ள ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து பதவி உயர்வுகளை பெறலாம்.
கடந்த கோட்டாபய அரசாங்கம் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 600 சிற்றூழியர்களை நியமிக்கும் அதிகாரத்தை கொடுத்தது.
அம்பாறையில் மொட்டில் வந்தவர்கள் மூவர் இடையில் வந்த முசாரப் ஒருவர் என 2400 பேரை நியமித்துக் கொண்டனர்.இதில் தமிழர்கள் யாரும் இல்லை.
ஆகவேதான் கிழக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த மக்களின் ஆணையை பெறும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். ஏனெனில் ஏனைய கட்சிகள் இதற்கான திட்டமிடலை மேற்கொள்ளவில்லை.
அபிவிருத்திகள்
இதற்காகவே இன்று ஆலையடிவேம்பிற்கு வருகை தந்துள்ளேன். இதுபோன்ற பாராட்டு நிகழ்வுகளை நடாத்தி மக்கள் மனங்களிலும் மாணவர்கள் மனங்களிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.
எனினும், மட்டக்களப்பில் மாத்திரம் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுவதாக விமர்சனங்கள் உள்ளது. அதற்கு காரணம் உண்டு. அந்த மக்கள் எனக்கு ஆணையினை வழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடுத்தடுத்து நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதை யாரும் தடுக்க முடியாது. மக்கள் ஆணை தொடர்ந்தும் எனக்கு கிடைக்கும் என நம்புகின்றேன்.
ஆனாலும் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்திலும் கல்வி உள்ளிட்ட அபிவிருத்தி
திட்டங்கள் மேற்கொள்ளப்படும்” என்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |