தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதன் பிரதிவாதி ஒருவரை ஆள்மாற்றம் செய்ய இடமளிப்பதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் வரும் ஜூன் மாதம் நான்காம் திகதிக்குத் குறித்த வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திகதியில் பிரதிவாதி ஒருவரை மாற்றுவது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும், அதன் பின்னரே வழக்கின் விசாரணை பற்றி ஆராயப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயஸ் ரஸாக் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
[FT6CHKB ]
வழக்கின் பிரதிவாதிகள்
வழக்கை இணக்கமாக முடிவுறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்வதற்காகவே இன்று வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், வழக்கின் பிரதிவாதிகளான சிறீதரன் எம்.பி., குகதாசன் எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் வழக்கை முடிவுறுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து இன்றைய விசாரணையில் கடும் விவாதங்கள் இடம் பெற்றன.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கட்சியின் மத்திய குழுவில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு, அது பற்றித் தாம் ஒரு பிரதிவாதி என்ற முறையில் நீதிமன்றத்திற்கு விவரமாக விடயங்களைச் சமர்ப்பித்து இருக்கையில், மேற்படி மூன்று பிரதிவாதிகளும் கட்சிக்குத் தெரியாமல் - கட்சியை இருட்டில் வைத்துக்கொண்டு - தம்பாட்டில் ஒரு திட்டத்தை, அதுவும் முன்னைய இணக்க ஏற்பாடுகளுக்கு மாறாக முன்வைத்து, இணக்கத்துக்கான வாய்ப்பை வேண்டுமென்றே குழப்பி அடிக்க முயன்றுள்ளனர் என்று பிரதிவாதிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் தமது தரப்பில் தாமே முன்னிலையானார். கட்சியின் செயலாளர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் மற்றும் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி சயந்தன் முன்னிலையானார்.
கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் இரத்தினவடிவில் சார்பிலும் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார்.
கட்சியின் மத்திய குழு
சுமந்திரன், சத்தியலிங்கம், குலநாயகம், இரத்தினவடிவேல் ஆகிய பிரதிவாதிகள் கட்சியின் மத்திய குழுத் தீர்மானபடி 156 உறுப்பினர்களுடன் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கான இணக்கத் திட்டத்துக்குத் தாங்கள் சம்மதிக்கின்றார்கள் எனத் தெரிவித்தனர்.
அதேசமயம் சிறீதரன், குகதாசன், யோகேஸ்வரன் ஆகியோர் 324 உறுப்பினர்களுடன் கட்சியின் மத்திய குழுவை கூட்டும் திட்டத்தை வலியுறுத்தினர். இதையே ஆரம்பத்தில் பிரதிவாதியான சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்று அவர்கள் மூவர் சார்பிலும் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் தெரிவித்துள்ளார்.
வழக்கின் பிரதிவாதி களுக்கு இடையே கருத்து முரண்பாடு இருப்பதை விசனத்துடன் சுட்டிக்காட்டிய வழக்காளி தரப்பு சட்டத்தரணி, இக்காரணத்தால் இணக்கமான தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் அருகி உள்ளன என்றும், வழக்கு விசாரணை நடத்தியே முடிவு காண வேண்டும் எனவும் சுட்டி காட்டினார்.
வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அப்பதவியிலும் இல்லை, அவர் உயிரோடும் இல்லை என்று சுட்டிக் காட்டப்பட்டது.
மாவை சேனாதிராஜா
அதனால், அந்த இடத்துக்குப் பதில் தலைவரின் பெயரை வழக்கில் பிரதிவாதியாகச் சேர்ப்பதா என்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக வழக்கு ஜூன் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்தத் திகதியில் கட்சியின் பதில் தலைவர் எனக் கருதப்படுபவர் வழக்காளியாகச் சேர்க்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் அந்த விடயம் தீர்மானிக்கப்பட்ட பின்னரே வழக்கை விசாரிப்பது குறித்த முடிவை நீதிமன்றம் எடுக்கும் என்றும் கூறப்படுகின்றது.
அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு வர நீண்ட காலம் செல்லும் என்று சட்ட வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.