இலங்கையின் தேசிய மலர் குறித்து எழுந்துள்ள சர்ச்சை
இலங்கையின் தேசிய மலர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையின் தேசிய மலர் அல்லி மலரா அல்லது நீலோற்பலமா (நில் மானல்) என்பது தொடர்பில் நிலவும் சர்ச்சைகளை பரிசீலித்து பரிந்துரைகளை முன்வைக்க விசேட நிபுணர் குழுவை பிரதமர் நியமித்துள்ளார்.
அமைச்சர் நசீர் அஹமட் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதால், இது தொடர்பில் விரைவில் உறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய மலர் குறித்து எழுந்துள்ள சர்ச்சை
எவ்வாறாயினும், ‘அல்லி மலர்' (Water Lily Flower) இலங்கையின் தேசிய மலர் என்பதை தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய உரிய நிறுவனங்களைப் போன்று செய்தித்தாள் விளம்பரங்கள் ஊடாகவும் பொதுமக்களை உரிய முறையில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு சுற்றாடல் அமைச்சுக்கு கடந்த மார்ச் மாதம் ஆலோசனை வழங்கியிருந்தது.
இந்நிலையில், முத்திரைப் பணியகம் நீலோற்பலம் மலருக்கு பதிலாக தவறாக அல்லி மலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் பாடப்புத்தகங்களில் உள்ள தவறான மலரின் படத்தை காட்டி கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் தீப்தி யகந்தாவல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, இலங்கையின் தேசிய மலராக அல்லி பூ பெயரிடப்பட்டிருந்தது.
இருப்பினும் தேசிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் இது தொடர்பில் விளம்பரம் செய்ய தவறியுள்ளமையினால் இலங்கையின் தேசிய மலராக இன்றும் ´நீலோற்பலம்´ என பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுவதாக கோபா குழு அறிவித்திருந்தது.
எனவே தேசிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில், இலங்கையின் தேசிய மலர் தொடர்பில் காணப்படும் சர்ச்சை தொடர்பில் பரிசீலித்து உரிய பரிந்துரைகளை வழங்குமாறு பிரதமரினால் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.