மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் : இந்திய தூதுவரின் வருகைக்கு எதிர்ப்பு
ஒலுவில் துறைமுகத்தை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் இறையாண்மை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை தேசப்பற்றுள்ள இலங்கையர்களாக ஒன்றிணைந்து நாம் முறியடிக்க வேண்டும்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் நமது அண்டை நாடான இந்தியாவை அண்மித்த மாகாணங்களாகும்.
எனவே, அந்த மாகாணங்களில் இத்தகைய பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அபிவிருத்தி செய்ய அல்லது பராமரிக்க போகின்றோம் என்ற தோரணையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பது புத்திசாலித்தனம் அல்ல. அது இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தாகும்.
இவ்வாறான காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிராக எழுந்து நின்று குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |