கரைதுறைப்பற்றில் கிராம உத்தியோகத்தர் பிரிவு எல்லை மீள் நிர்ணயத்திற்கு எதிர்ப்பு (Photos)
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை எல்லை மீள் நிர்ணயம் செய்வதற்குப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 219 கிராமங்களைக் கொண்ட 46 கிராம அலுவலகர் பிரிவுகள் காணப்படுகின்றன.
இதில் பல கிராமங்களை இணைத்தல் தொடர்பாக 2014ஆம் ஆண்டு முன்மொழிவுகளை ஆராய்ந்து அது தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் ஊடாகவும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் ஊடாகவும் அனுமதி பெற்று அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செம்மலை கிழக்கு, செம்மலை கிராம சேவையாளர் பிரிவினை இணைத்து செம்மலை கிராசேவையாளர் பிரிவாகவும், குமுழமுனை மேற்கு, தண்ணிமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவினை இணைத்து தண்ணிமுறிப்பு கிராச சேவையாளர் பிரிவாகவும், முள்ளியவளைமத்தி, முள்ளியவளை தெற்கு கிராம சேவையாளர் பிரிவினை முள்ளியவளை தெற்கு கிராம சேவையாளர் பிரிவாகவும், வண்ணாங்குளம், கோவில்குடியிருப்பு, மணல்குடியிருப்பு, முல்லைத்தீவு நகர், கிராம சேவையாளர் பிரிவுகளை இணைத்து முல்லைத்தீவு நகர் கிராம சேவையாளர் பிரிவு என்றும் நீராவிப்பிட்டிகிழக்கு,நீராவிப்பிட்டி மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகளை இணைத்து நீராவிப்பிட்டி கிராம சேவையாளர் பிரிவு என்றும் கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு கிராம சேவையாளர் பிரிவுகளை இணைத்து கணுக்கேணி கிராம சேவையாளர் பிரிவு என்றும் புதிய கிராம சேவையாளர் பிரிவிற்காக எல்லை நிர்ணய முன்மொழிவுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 14 கிராம சேவையாளர் பிரிவுகளை இணைத்து 6 கிராம சேவையாளர் பிரிவுகளாக எல்லை நிர்ணயம் செய்யக் கோரப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
கிராம சேவையாளர் பிரிவுகளைக் குறைப்பதன் ஊடாக கிராமங்களுக்கான அபிவிருத்தி
ஒதுக்கீடுகளில் பாரிய பிரச்சினை எழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது
தொடர்பில் கிராம மட்ட அமைப்புக்களுடனும் மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்து
ஆலோசித்து கூட்டம் நடத்தி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என
ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.





