நோர்வூட் தனி வீட்டுத் திட்டத்திற்கான குடி நீர் விநியோக திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
நோர்வூட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள தனி வீட்டுத்திட்டத்திற்கான குடி நீர் விநியோக திட்டத்திற்கு குறித்த பிரதேச மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதையடுத்து குறித்த திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நோர்வூட் தோட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்று ஏரிந்து நாசமாகிய நிலையில் நிவ்வெளி தோட்ட தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
தனி வீட்டுத்திட்டம்
இதனையடுத்து குறித்த 10 குடும்பங்களுக்கும் இந்திய அரசின் நிதிப்பங்களிப்பில் தனிவீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அத்தோடு குடியிருப்புகளுக்கான குடிநீர் தோட்டம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதியோதுக்கீட்டில் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த திட்டப்பணிக்கு பெக்கோ இயந்திரம் சென்ற போது நிவ்வெளிகிராம மக்களின் பயன்பாட்டுக்கான குடிநீர் விநியோக நீர்க்குழாய்கள் உடைந்தமையினால் சுமார் 70 குடும்பங்கள் நீரின்றி பாதிப்படைந்தனர்.
இதனையடுத்து குறித்த கிராம மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன் குறித்த திட்டத்தை நிறுத்தக்கோரியும் வலியுறுத்தினர்.
பிரதேச மக்கள் எதிர்ப்பு
நிவ்வெளிகமவில் 70 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் வெய்யிற்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆகவே இங்கிருந்து புதிய வீடமைப்பு திட்டத்திற்கு நீர்விநியோக திட்டத்தினை முன்னெடுக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினர்.
நீர்விநியோக திட்டத்தை முன்னெடுக்கும் பெருந்தோட்ட மனித அபிவிருத்தாபன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் சேதமாகிய நீர்குழாய் திருத்தியமைத்து தருவதாக உறுதியளித்ததுடன் நீர்விநியோக திட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாகவும் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


