கைது பயத்தில் அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தையில் முக்கிய அரசியல்வாதிகள்
எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் வழக்குகளையும் தவிர்ப்பதற்காக, தற்போதைய அரசாங்கத்துடன் இரகசிய 'ஒப்பந்தங்களை' மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போது முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய நாடாளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிக்குள் பல தெளிவான குழுக்களுடன் செயல்படுவதை காண முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரகசிய உடன்படிக்கைகள்
இவர்களில் ஒரு குழுவினர் அரசாங்கத்துடன் பல்வேறு நிலைகளில் உடன்படிக்கைகளை மேற்கொண்டு, தங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படுவதைத் தடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய இரகசிய உடன்படிக்கைகளை தவிர, மக்களுக்காக நேரடியாகவும், தைரியமாகவும் குரல் கொடுக்கும் உண்மையான எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் ஒடுக்கப்படும் ஒரு போக்கும் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளர்.
அரசாங்கத்துடன் உடன்படிக்கைகள் செய்துகொள்ளாமல், தைரியமாக எதிர்க்கட்சி அரசியலில் ஈடுபடும் அத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் செயற்பாட்டாளர்களும் இவ்வகையில் ஒடுக்கப்படும் வேளையில், சில அரசியல்வாதிகள் தங்களின் தனிப்பட்ட பிழைப்புக்காகவும் வழக்குகளைத் தவிர்ப்பதற்காகவும் அரசாங்கத்துடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது, எதிர்க்கட்சியின் பங்கைப் பெரிதும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் வலியுறுத்தியுள்ளார்.