நாட்டின் வறுமை குறித்து அரசாங்கம் தகவல்களை மூடி மறைக்கின்றது
நாட்டின் வறுமை நிலமை குறித்து அரசாங்கம் தகவல்களை மூடி மறைபப்தாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி மற்றும் குடிசன மதிப்பீட்டு திணைக்களம் என்பன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் இதில் பல்வேறு தவறுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கையானது 220 லட்சம் மக்களையும் ஏமாற்றி திசை திருப்பும் வகையில் அமையப் பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு நேரத்திலும் எந்தவொரு தரப்பினருடனும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்ட சமூக-பொருளாதார அறிக்கையில், வறுமை மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பான பழைய தரவுகளை அரசாங்கம் பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் திருத்தப்பட்ட புதிய அறிக்கையை வெளியிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த அறிக்கையில்; வீட்டு வருமானம், செலவினம், வறுமை, வீட்டுவசதி மற்றும் வாழ்க்கை நிலைமைகள் தொடர்பான பிரிவுகளில் 2016 முதல் 2019 வரையிலான தரவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிற பிரிவுகளில் 2023 முதல் 2025 வரையிலான அண்மைக்கால புள்ளிவிபரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், வறுமை மற்றும் பொருளாதாரக் கஷ்டங்களை மதிப்பிடுவதற்கு புதுப்பிக்கப்பட்ட தரவுகள் ஏன் பயன்படுத்தப்படவில்லை எனக் கேள்வியெழுப்பினார்.
ஒரு நபர் 30 நாட்களுக்குத் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய 17,315 ரூபாய் போதுமானது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இது நகைப்பிற்குரியதும் உண்மைக்குப் புறம்பானதுமான தகவல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கை தயாரிக்கும் போது வறுமை கோடு தொடர்பில் சரியான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் இந்த வறுமை தொடர்பான புள்ளிவிபரங்களையா பயன்படுத்தப் போகிறது என்றும் கேள்வியெழுப்பினார்.
உலக வங்கியின் தரவுகள் எனக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கான வறுமைக்கோடு 8.30 டொலர் (சுமார் 2,724 ரூபாய்) எனக் குறிப்பிட்டதுடன், நாட்டின் வறுமை வீதம் 65.4% ஆக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 33% குடும்பங்கள் தீவிர உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும் தனது அறிக்கையில் இந்த விபரங்களை அவர் முன்வைத்துள்ளார்.
பழைய புள்ளிவிபரங்களைப் பயன்படுத்தியமைக்கான காரணத்தை அரசாங்கம், மத்திய வங்கி மற்றும் குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் ஆகியவை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பழைய புள்ளிவிபரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் அறிக்கை தயாரித்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.