அநுரகுமார உறுதிமொழிகளை நிறைவேற்றினால் முன்னேற்ற வாய்ப்பு : மனித உரிமைகள் கண்காணிப்பகம்
2024 செப்டம்பர் 23ஆம் திகதியன்று இலங்கையில் பதவியேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அரசாங்கம், இலங்கையை தொடர்ச்சியான நெருக்கடிகளில் ஆழ்த்திய நீண்டகால மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்துள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம், தனது 2025இற்கான உலக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அநுரகுமார திசாநாயக்க மிகவும் சமமான பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதாகவும், மிகவும் துஸ்பிரயோகம் நிறைந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்,
ஆனால் 1983-2009 வரை இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரின் போது பரவலான உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை அவர் ஆதரிக்கவில்லை என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரங்களில் அளித்த வாக்குறுதிகள்
2024 ஆம் ஆண்டில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், பொலிஸ் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள், ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களை துன்புறுத்தி அச்சுறுத்தின என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பல நெருக்கடிகள், உரிமை மீறல்கள், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் விமர்சகர்களை மௌனமாக்க முயலும் சட்டங்கள், தண்டனை விலக்கு மூலம் இணைக்கப்பட்டுள்ளன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய துணை இயக்குநர் மீனாட்சி கங்குலி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதி திசாநாயக்க தனது பிரசார உறுதிமொழிகளை நிறைவேற்றினால் உரிமைகளில் உண்மையான முன்னேற்றத்தை அடைய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனது கட்சியின் தேர்தல் பிரசாரங்களின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலமும், அவற்றைக் கட்டியெழுப்புவதன் மூலமும் இலங்கையின் பல மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி அநுர முன்வரவேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய துணை இயக்குநர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |