எதிரணிகள் ஒன்றித்தாலும் எம்மை வீழ்த்தவே முடியாது: ஜனாதிபதி சூளுரை
எதிரணிகள் ஒன்றித்தாலும் எம்மை வீழ்த்தவே முடியாது.எமது பயணத்துக்கு மக்கள் ஆசிர்வாதம் உள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மக்கள் பணம் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முற்படுவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
குருநாகலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கல்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு ரணில் விக்ரமசிங்க அரச வதிவிடத்தைக் கையளித்துவிட்டார். அதற்காக அவருக்கு நன்றி.
கோட்டாபய ராஜபக்ச, ஹேமா பிரேமதாஸ ஆகியோரும் வதிவிடத்தை ஒப்படைத்துவிட்டனர். ஆனால், மூவர் மாத்திரம் கையளிக்க மறுக்கின்றனர். பணம் இல்லாமல் இல்லை, ஆனால் அதிகாரத்தையும், சுகபோகத்தையும் கைவிட அவர்கள் தயாரில்லை. மக்கள் பணத்தை வீணடித்தேனும் வாழ நினைக்கின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது.
இந்தக் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.அதனை நாம் செய்யும்போது அரசியல் பழிவாங்கல் என்கின்றனர். ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர், தனது மாத சம்பளத்தைக்கூட வங்கியில் இருந்து பெற மறந்துள்ளார். கடைசியில் அவரின் பிரத்தியேக செயலாளர் அந்த பணத்துக்கு வேட்டு வைத்துவிட்டார்.
மக்களின் பங்களிப்பு
அப்படியானால் இவர்களிடம் பணம் இல்லையா பாரிய வீடுகளை வழங்கமாட்டோம். செல்வதற்கு வழியில்லை என்றால் இருவர் வாழக்கூடிய அளவிலான வீடொன்றை வழங்குவோம். அதேவேளை, எமக்குப் பல சவால்கள் உள்ளன. அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.
எனினும், அவர்கள் (எதிரணிகள்) குழப்பமடைந்துள்ளனர். அரசொன்று ஆட்சிக்கு வந்து நிலையான நிலைமையை ஏற்படுத்துவதற்கு சிறிது காலம் எடுக்கும். அந்த காலப்பகுதிக்குள் குறுக்கு வழியில் வீழ்த்துவதற்கு முற்படுகின்றனர்.
கடந்த காலங்களில் பல அணிகள் இருந்தன. எல்லாம் ஒன்றாக இணைந்துவிட்டனர். அவர்களின் எண்ணம் ஈடேறாது. மக்கள் எமது பக்கம் உள்ளனர் . எமது பயணத்துக்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள். வெற்றியை நோக்கி செல்ல தமது பங்களிப்பை வழங்குவார்கள் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |