யாழில் இடம்பெற்ற சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில், நேற்று (20) தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் அரசியற் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், இளையோர் மற்றும் மகளீர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என ஏறத்தாழ 100 பேரளவில் பங்குபற்றியிருந்தனர்.
அரசாங்கம் உறுதி
தொடக்க உரையாற்றிய அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி க. குருபரன் (யாழ். பல்கலை சட்டத்துறை முன்னாள் தலைவர்) பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்ததைத் சுட்டிக்காட்டினார்.

தமிழர் தரப்பினுடைய நிலைப்பாடு பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் அதற்குப் பதிலீடாக வேறெந்தச் சட்டமும் தேவையானது அல்ல என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.
மேலும் தற்போது நிலவுகின்ற தண்டனைச் சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைக் கோவை மற்றும் இதர குற்றவியல் சட்டங்களின் ஏற்பாடுகளில் போருக்குப் பின்னரான சமூக நிலைமை கையாளப்படக் கூடியது, அதற்கென தனித்து பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் தேவையில்லையெனக் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம்
சர்வதேசச் சட்டத்தில் இதுவரை ஏற்கப்பட்ட பயங்கரவாதமென்ற சொற்தொடருக்கான வரைவிலக்கணம் இல்லை என்பதனையும் சுட்டிக்காட்டிய குருபரன் குறித்த சட்டத்திலே பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணமானது மிகவும் நெகிழ்வுப் போக்கான நிலையிலே அனைத்தையும், எதையும் உள்வாங்கலாம் என்ற தொனியிலே முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கருத்துரைத்த அவையினர், அரகலய போராட்டத்தின் பயனாக உருவாகிய அரசாங்கம் மீண்டும் ஒரு அரகலய உருவாகுவதனைத் தடுக்கும் விதமாக இந்தச் சட்டத்தினை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், கட்சியின் தேர்வு நிலைத் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வேலன் சுவாமிகள், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சர்வேஸ்வரன், குரலற்றவர்களின் குரல் மு.கோமகன், கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் இன்பம், யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் யசோதரன், சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் உள்ளிடோர் சமூக அரசியற் செயற்பாட்டாளர் கருத்துத் தெரிவித்தனர்.






