ஈழச்சினிமா வளர்ச்சிப் போக்கில் முன்மாதிரியான ஊழி திரைப்படம்
ஈழ சினிமாவின் வளர்ச்சிப் போக்கில் ஊழி திரைப்படம் ஒரு முன்மாதிரி என சமூகவிட சமூக விடய ஆய்வாளர் வரதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மே 10 ஆம் திகதி தமிழர்கள் வாழும் உலக நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் ஈழத்தின் கதையாக அமைந்திருந்தது.
இலங்கையின் வடக்கின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட ஊழி திரைப்படத்தில் வடக்கில் வாழும் பலரும் நடித்திருக்கின்றனர்.
ஈழத்தில் இன்று நடக்கும் நிகழ்வுகளையும் அதன் உள்ளார்ந்த நோக்கத்தினை புரிந்து கொள்ளும் வகையில் திரைக்கதை நகர்த்தப்பட்டிருப்பது இன்றைய சூழலில் ஊழி தேவைப்பாடான திரைப்படம் என்பதை உணர வைத்துள்ளது.
இலங்கையில் திரையிடல்
உலக நாடுகளில் வெளியிடப்பட்ட அதே மே 10 இல் இலங்கையிலும் வெளியிடுவதற்கு எடுக்கப்பட்டிருந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்திருந்தன.
ஆயினும் யூன் 1 இல் வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்து அதன் சிறப்புக் காட்சி யூன் 1 இல் யாழ்.ராஜா திரையரங்கில் மாலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டு இருந்தது.
படத்தின் நடிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டு அரங்கு நிறைத்திருந்த ஒரு சூழலில் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டிருந்தது.
இலங்கையின் திரைப்பட்க்கூட்டுத்தாபனத்தின் தணிக்கைக்குப்பட்டு வெளியிடப்படுவதாக அது இருந்திருந்தது. சிறப்புக் காட்சி ஆரம்பிப்பதற்கு முன் திரையரங்கில் கூடியிருந்த மக்களுக்கு திரைப்பட இயக்குநர் ரஞ்சித் யோசேப்பின் குரல் வழி பேச்சு ஒலிபரப்பப்பட்டிருந்தது.
அதில் இலங்கை வெளியீட்டில் தான் எதிர்கொண்ட சவால்களை விபரித்திருந்தார்.இது ஏன் இலங்கையில் திரையிடப்பட வேண்டும் எனவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எட்டு இடங்களில் தணிக்கைக்குட்பட்டதால் காட்சிகளை நீக்க வேண்டியிருந்தது.இன்னும் சில இடங்களில் ஒலி நீக்கம் செய்யப்பட்ட காட்சிகளாக அமைக்கும்படி தணிக்கை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது என விபரித்திருந்தார்.
ஒலித் தணிக்கையில் குறிப்பாக ஈழத்தின் மூத்த கவிஞர்கள் பற்றிய தமிழாசிரியர் ஒருவர் விபரிப்பதாக கற்பிப்பதாக அமைக்கப்பட்ட காட்சி அமைந்திருந்தது. இது கவலைக்குரிய விடயமாக இருந்ததாக அரங்கில் இருந்த மூத்த கவிஞர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தமிழாசிரியராக கவிஞர் தீபச்செல்வன் நடித்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஊழி பற்றி
கலைஞர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்ததனை சிறப்புக் காட்சி பார்வையிடப்பட்டதன் பின்னர் அவர்களது கருத்துப் பகிர்வுகள் மூலம் உணர முடிகின்றது.
படத்தின் எந்தவொரு பகுதியிலும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை.படத்தின் காட்சியமைப்பு கதையோடு இறுக்கமாக பொருந்திப் போவதோடு பின்னனி இசையும் இலகுவாக சூழலை ஒத்திசையச் செய்து பார்ப்போரை களச்சூழலுக்கு கூட்டிச் செல்வதில் வெற்றி பெற்று விட்டது.
நடிகர்கள் தங்களின் நடிப்பினால் கதையின் பாத்திரங்களாகவே அவர்கள் மாறி நடித்திருந்தார்கள் என்பது ஆச்சரியமான ஆனாலும் பாராட்டப்பட்க் கூடியதாக இருக்கின்றது என சமூக விட ஆய்வாளர் தன் பார்வைப் புல அவதானிப்புக்களில் இருந்து கருத்துரைப்பதாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
ஈழப்பரப்பில் சிறந்த திரைப்பட நடிப்பினை வெளிக் காட்டக்கூடிய பல கலைஞர்கள் இருக்கின்றனர் என்பதை ஈழத்தில் தொடர்ந்து வெளிவரும் ஈழச் சினிமாவை பிரதிநிதித்துவப்படுத்தும் திரைப்படங்கள் எடுத்தியம்பி வருகின்றன என்பதையும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஊழி ஈழத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரு திரைப்படம் என்பதில் ஐயமில்லை.
போதையால் சீரழியும் சமூகம், சமூகப் பிறழ்வான செயற்பாடுகள் இளையவர்களை பாதிக்கும் முறையை எடுத்துக்காட்டல் , காதல், காணாமல் போனோரை தேடல் , காணாமலாக்கப்படுதல், புலம்பெயர் மக்களின் நிதி தாயகத்தில் பாவிக்கப்படும் முறை ,சிங்களவர்களால் தமிழர்களின் இடங்கள் ஆக்கிரமிக்கப்படல் என பல கதைக் களங்களை சம நேரத்தில் கொண்டு சென்று விவரித்திருக்கின்றார்கள்.
ஈழச்சினிமா
ஈழச் சினிமா என்பது இன்று தோன்றியதாக கருத முடியாது.அது தமிழீழ விடுதலைப்புலிகளின் திரைப்பட வெளியீட்டுப் பிரிவின் செயற்பாடுகளோடு ஆரம்பமானதாகவே கருத வேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் உறங்காத கண்மணிகள்,இன்னுமொரு நாடு ஆகிய முழு நீள திரைப்படங்களின் வெளியீடோடு ஆரம்பமானதாக இருக்கலாம்.அந்த திரைப்படங்களின் முன்னோடியாக நிதர்சனத்தின் ஒளிவீச்சு அமைந்திருக்கின்றதும் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்றாகும்.
ஈழம் என்பது இலங்கையை குறிக்கும் தமிழர்களின் பெயர் என்பதும் அது இப்போது வடக்கு கிழக்கை மட்டும் குறிக்கும் பெயராகி ஆகி வருவதையும் இங்கே சுட்டிக் காட்டல் பொருத்தமானதாகும்.
ஈழம் என்பது முழு இலங்கையும் என்றால் ஈழச்சினிமா என்பது இலங்கையில் இருந்து வெளிவரும் எல்லா திரைப்படங்களையும் உள்ளடக்கும்.அதாவது சிங்கள மொழி மூலப் படங்களும் தமிழ் மொழிப்படங்களுமாக அமைவதோடு சிங்களவர்கள் எடுக்கும் படங்களும் ஈழச்சினிமாவாகவே அமைந்து விடுவதையும் நோக்க வேண்டும்.
ஆயினும் இன்று ஈழச்சினிமா என்பது தமிழீழ விடுதலைப்புலிகளினால் தனி நாட்டுக்கான நிலத்தொடராக குறிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இருந்து வெளிவரும் திரைப்படங்களை மட்டுமே கருதுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தணிக்கை
அண்மைக்கால ஈழச்சினிமா முழு நீளப் படங்களில் இரண்டு திரைப்படங்களை எடுத்து நோக்கலாம். மதிசுதாவின் வெந்து தணிந்தது காடு மற்றும் ரஞ்சித் யோசேப்பின் ஊழி.இரண்டும் ஈழத்தின் துயர் மிகு கதைக் களத்தை மையமாக கொண்டிருந்தன.
வெந்து தணிந்தது காடு தணிக்கையின்றி வெளியாக ஊழி அளவுக்கு மீறிய தணிக்கையைச் சந்தித்தது.
ஈழத்தமிழர்களிடையே வெந்து தணிந்த காடு முரண் விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டது.ஆயினும் ஊழியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதையும் இங்கே நோக்க வேண்டும்.
ஈழத்தில் இருந்து இப்போது வெளிவரும் எந்தவொரு திரைப்படங்ளும் இலங்கை அரசாங்கத்தின் தணிக்கைக்குச் சென்று வரும் என்பதை ஈழச் சினிமாவில் பயணிப்போர் கருத்தில் எடுக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கத்தின் கொள்கை முன்னெடுப்பிற்கு இடையூறாக அல்லது முரண்படும் நிலையில் உள்ள திரைப்படத்தின் காட்சிகள் மீது அதன் தணிக்கை பாயும்.இது இலங்கையில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் உள்ள நடைமுறை என்பதும் நோக்கத்தக்கது.
தென்னிந்தியச் சினிமா கூட இந்திய மத்திய அரசின் தணிக்கைக் சான்றிதழைப் பெற வேண்டும் என்பதையும் இங்கே நோக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திரைப்பட வெளியீட்டு பிரிவு ஈழத்தின் ஒளிபரப்பப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் அதீதமான காதல் காட்சிகளை தணிக்கை செய்திருந்தது.சில திரைப்படங்களின் பாடல் காட்சிகள் முழுமையாகப் நீக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருந்த பரசுராமன் மற்றும் பரத் நடிப்பில் வெளியாகியிருந்த போய்ஸ் (Boys) ஆகிய திரைப்படங்களை ழுமையாகவே தடை செய்திருந்தார்கள் என ஈழச்சினிமாவில் உயிர்ப்பூ மற்றும் இன்னுமொரு நாடு போன்ற படங்களில் நடித்திருந்த ஆர்வலருடனான உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்ததும் நோக்கத்தக்கது.
ஈழச்சினிமா வளர்ச்சி நோக்கி நடைபோட இலங்கையின் தணிக்கை தொடர்பாகவும் நாசுக்காக ஈழத்தின் துயர் மிகு வலிகளையும் சொல்லப்பழக வேண்டும்.
எட்டு இடங்களில் காட்சிகளை நீக்க வேண்டிய சூழலின் பின்னர் ஊழி தன் உயிரை இழந்திருந்தது என்பதை தணிக்கைக்கு முன்னரும் தணிக்கைக்குப் பின்னருமான ஊழியைப் பார்வையிடும் யாரொருவராலும் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
சொல்ல வந்ததை எடுத்து முடித்த பின்னர் பறிகொடுத்து நிற்பதாக அமையும் சூழலை இனியும் ஈழச்சினிமா திரைப்படங்கள் எதிர்நோக்க கூடாது என்பது தொடர்பிலும் கருத்தில் எடுக்க வேண்டும்.
அப்போதுதான் ஈழச்சினிமா வியாபாரத்தில் வெற்றியடையும்.தென்னிந்தியச் சினிமா பெற்று வரும் வியாபார அனுகூலங்களில் குறைந்தளவேனும் ஈழச் சினிமாவால் பெற முடியும்.இந்த மாற்றம் ஈழச் சினிமாவிற்குள் முதலீட்டாளர்களின் வருகையை அதிகரிக்கும் என்பதையும் நோக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |