மக்களை ஏமாற்றி பாரிய மோசடி! கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிய நபர்கள்
பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள Onmax DT தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் கணக்குகளில் 80 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் எழுத்துமூலமாக செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை நடத்தப்பட்டது.
அதற்கமைய, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் 5 உறுப்பினர்களின் கணக்குகளில் பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
அத்துல இந்திக்க சம்பத் என்பவரின் கணக்கில் 29,567,044 ரூபாயும், கயாஹான் அபேரத்ன என்பவரின் கணக்கில் 1,970,804 ரூபாயும், சம்பத் சந்தருவன் என்பவரின் கணக்கில் 558,941,657 ரூபாயும், சாரங்க ரன்திக்க ஜயதிஸ்ஸ என்பவரின் கணக்கில் 182,563,641 ரூபாயும், தனஞ்சய ஜயான் என்பவரின் கணக்கில் 111,574,964 ரூபாயும் உள்ளதென குற்றப்புலனாய்வு திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
ஆனால், குறித்த நிறுவனத்தின் கணக்கில் கணிசமான பண இருப்பு இல்லை என்று தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.