இலங்கையின் புதிய வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கையின் புதிய வாகன இலக்க தகடுகளை தயாரிப்பதற்கான நீண்ட காலமாக தாமதமடைந்து வந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் சவுத் ஏசியன் டெக்னோலோஜிஸ் (South Asian Technologies) நிறுவனத்திற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (10) இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நிலுவையிலுள்ள இலக்க தகடுகளின் எண்ணிக்கை
தற்போது நிலுவையிலுள்ள இலக்கத் தகடுகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தையும் (200,000) தாண்டியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்தம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை. எனினும், அதன் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
உந்துருளிகள், சிற்றூந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மின்சார வாகனங்கள் உட்பட 2 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் நிரந்தர இலக்கத் தகடுகள் இன்றி காத்திருக்கின்றன. தினசரி பதிவாகும் புதிய வாகனங்களால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய இலக்கத் தகடுகள் மோசடிகளைத் தடுக்கவும், கண்காணிப்பை மேம்படுத்தவும் 7 பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச ஆய்வகத்தின் சான்றிதழ்
இதில் 6 அம்சங்களுக்கு மொரட்டுவ பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், 7-வது அம்சத்திற்கு சர்வதேச ஆய்வகத்தின் சான்றிதழ் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

25 வருட கால ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, புதிய கொள்முதல் கட்டமைப்பிற்கு மாறியமை மற்றும் ஏலத்தில் தோல்வியடைந்த நிறுவனங்களின் மேன்முறையீடுகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர், உற்பத்தியாளர் தனது பணிகளை ஆரம்பித்து முதல் தொகுதி இலக்கத் தகடுகளை விநியோகிக்க அதிகபட்சம் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,"உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட பின்னரும், நிலுவையிலுள்ள பெரும் எண்ணிக்கையிலான தகடுகளை முழுமையாக விநியோகித்து முடிக்க மேலும் சிறிது காலம் எடுக்கும்," என கமல் அமரசிங்க எச்சரித்துள்ளார்.