அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பில் வெளியான தகவல்
தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்ட 1690 ஆயுதங்களில் 30 ஆயுதங்கள் மட்டுமே மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வருடங்களில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களால் பெறப்பட்ட துப்பாக்கிகளில் 30 துப்பாக்கிகள் மட்டுமே நேற்று வரையில் வெலிசர கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள தானியங்கி துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த உத்தரவின் பிரகாரம், இந்த ஆயுதங்கள் கையளிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரிவான விசாரணைகள்
கடந்த சில வருடங்களாக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களுக்கு தானியங்கி துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தானியங்கி துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் 1,690 துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் முறையான கணக்கெடுப்பு செய்து வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளின் எண்ணிக்கையை கண்டறிய வேண்டும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அறிக்கைகளை பெறல்
இந்த துப்பாக்கி உரிமங்களை பெறுவதற்கு அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் அறிக்கைகளை பெற்றுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து தகுதியானவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது சில அரசியல்வாதிகள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக 8-10 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பெறப்பட்ட துப்பாக்கிகள் சில காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |