சர்ச்சைக்குள்ளாகும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம்: இலங்கையை எச்சரித்த சர்வதேச அமைப்பு
அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் அது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என ரெக் அமைப்பு(rec) இலங்கையை எச்சரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நிகழ்நிலைக் காப்பு சட்டமூல விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''நிகழ்நிலை காப்பு சட்ட விவாதம் தொடர்பாக நிலையியற் கட்டளை 50.2 சரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அறிக்கை
அதில், நிகழ்நிலை காப்பு சட்ட மூலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அந்த மாற்றங்கள் துறைசார் மேற்பார்வை குழுவுக்கு அனுப்பப்பட்டு, மாற்றங்களை சரியாக ஆய்வு செய்து அதுதொடர்பாக ஒரு அறிக்கை தாயாரிக்கப்பட்டு அந்த அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும்.
குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரை சட்டமூலம் தொடர்பாக வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
இந்நிலையில் இவ்வாறு அறிக்கை என்னும் பெயரில் நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை 23ம் திகதி ஜனவரி மாதம் 2024 இல் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப் படாத நிலையில் விவாதம் நடைபெறுகிறது.
இந்நிலையில் உண்மையான சட்டத்தில் உள்ள அனைத்து விடயங்களும் மூடி மறைக்கப்பட்டு ஒரு இருண்ட நிலையில் இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ரெக் அமைப்பு எச்சரிக்கை
இந்த விவாதம் நடைபெறும் விடயங்கள் தொடர்பான் 56 சரத்துக்களின் 34 சரத்துக்கள் திருத்தப்படவேண்டும் என்று உயர் நீதிமன்ற வழக்குகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக அரசாங்கத்தினுடைய அமைச்சர் நியமித்த நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின் பிரகாரம் 42 சரத்துக்கள் இந்த சட்டமூலத்தில் திருத்தப்பட வேண்டிய நிலையில், அந்தத் திருத்தங்கள் செய்யப்படாமலயே இந்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
உலகில் மிகவும் மதிக்கப்படுகின்ற ரெக் அமைப்புகளுடைய கூட்டான ஆசிய இணைய குழு சிங்கப்பூரில் உள்ளது.
நேற்று இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் அமைச்சர் குறிப்பிடும் போது, ரெக் அமைப்பினுடைய அனுசரணையோடு இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய அவரது அந்தக் கருத்துக்கு ரெக் அமைப்பு அறிக்கை ஒன்றை விட்டிருக்கிறது.
மேலும், நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தற்போது உள்ள வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால் அது ரெக் அமைப்புக்கள் இலங்கையில் தொடர்பு வைத்திருப்பதைத் தடுக்கும் என்றும், இவ்விடயம் கடும் எதிர்ப்பை உருவாக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் தமது அமைப்பு சமர்ப்பித்த மாற்றங்கள் அனைத்தையும் உள்வாங்கினால் மட்டுமே சர்வதேச மட்டத்தில் இந்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், தற்போது இருக்கக் கூடிய சட்டமூலத்தை தாங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றும் அந்த அறிக்கை மூலம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது'' என அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |