அதிகரிக்கும் இணையத்தள கடன் மோசடி: விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்
நாட்டில் இடம்பெற்று வரும் நிகழ்நிலை கடன் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறுகிய காலத்திற்கு நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினால் பெரும்பாலும் நிகழ்நிலை கடன்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வர்த்தக நடவடிக்கை
இது குறித்து அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த விடயம் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். புதிய வர்த்தக நடவடிக்கைகளில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்கள்.
அவர்களுடைய நாடுகளில் இதே போன்ற சில விடயங்கள் உள்ளன. வியாபாரம் செய்துவிட்டு இப்போது இங்கு வந்தவர்கள் பல சமயங்களில் தற்காலிகமாகத் தங்கி, ஒன்றரை வருடங்களாக இந்தப் பணியைச் செய்கிறார்கள்.
இதில் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளோம். இதை தடுக்க தேவையான புதிய சட்டங்களை மிக விரைவில் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்'' என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |