களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் வாழைச்சேனையில் கைது
களுத்துறை - நாகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (09) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கைதாகியுள்ளார்.
இரகசிய தகவல் ஒன்றினையடுத்து வாழைச்சேனை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று இரவு 10 மணியளவில் கதுருவெலவில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றை வாழைச்சேனை நாவலடி பகுதில் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
இதன்போது களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான ஆறுமுகத்தான் குடியிருப்பு தன்னாமுனை பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய முருகேஷ் சசி குமார் என்பவரை கைது செய்தனர்.

இதனையடுத்து சந்தேகநபரை விசேட அதிரடிப்படையினர் தங்களிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த 16.01.2023 அன்று 9 மில்லி மீற்றர் ரக கைதுப்பாக்கி ஒன்று, மகசீன் ஒன்று, தோட்டாக்கள் 3, எஸ்.எப்.ஜி. 87 ரக கைகுண்டு ஒன்றுடன் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.