கந்தானையில் பாடசாலைக்குள் நுழைய முற்பட்ட பெற்றோர்களால் பதற்றம்
கந்தானையில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ பரவியதையடுத்து பெற்றோர்கள் குழுவொன்று தமது பிள்ளைகளை வெளியேற்ற முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரசாயன வெளிப்பாடு குறித்த பயம் காரணமாக, தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பாடசாலை வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றபோது, பாடசாலை நிர்வாகத்திற்கும் பெற்றோர் குழுவிற்கும் இடையே பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கந்தானை பொலிஸார் உடனடியாக நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
சுவாசக் கோளாறு ஏற்பட்டு சுமார் 50 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கந்தானை பிரதேசத்திலுள்ள இரசாயன உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் பரவிய புகை காரணமாகவே குறித்த மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கந்தானை பிரதேசத்திலுள்ள இரசாயன உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான களஞ்சியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கந்தானை - வீதி மாவத்தை பகுதியில் இன்று (08.08.2023) காலை இடம்பெற்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்தும் பணி
கம்பஹா மற்றும் நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவினரும், கடற்படையின் தீயணைப்பு பிரிவினரும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும் சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |