யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் அச்சுறுத்தலுக்குள்ளான ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் அச்சுறுத்தலுக்குள்ளானவர் சில மணி நேரங்களில் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்கான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம், யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் நேற்று முன்தினம்(11.09.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் மந்திகை ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் என்பவரே காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
வீட்டு உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக பொலிஸாரிடம் ஒரு தரப்பால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், மற்றொரு தரப்பை நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி அச்சுறுத்தியதுடன், அவரது வீட்டு உடமைகளை தூக்கி எறிந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் அச்சுறுத்தல் தொடர்பாக பாதிக்கப்பட்ட காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டதையடுத்து வீட்டுக்கு திரும்பிய போது அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இதனைதொடர்ந்து, காயமடைந்தவர் நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக காயமடைந்தவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.