தேர்தலை புறக்கணிக்குமாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட கஜேந்திரன் அணிக்கு புதுக்குடியிருப்பு பொலிஸார் இடையூறு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கூறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அணியினர் முல்லைத்தீவில் முன்னெடுத்த பிரசார நடவடிக்கையில் பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
அந்தவகையில், நேற்று(12) மதியம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட போது குறித்த பகுதிக்கு வந்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலரை இடைமறித்து அவர்களிடம் இருந்த துண்டுப்பிரசுரத்தை பெற்று அதில் உள்ள விடயங்கள் தொடர்பில் கேட்டபோது இரண்டு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
ஒருதொகை துண்டுப் பிரசுரங்கள்
அதன்பின்னர், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் அந்த இடத்துக்கு வருகைதந்து குறித்த துண்டுப்பிரசுரத்தை பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, தேர்தல் செலவீனங்களை மதிப்பிடுவதற்காக துண்டுப்பிரசுரங்களில் அச்சகத்தின் பெயர் கட்டாயம் அச்சிடப்பட்ட வேண்டும் எனவும் அவ்வாறு அச்சக பெயருடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்குமாறு கூறி அவர்கள் கைவசமிருந்த ஒருதொகை துண்டுப் பிரசுரங்களை பொலிஸார் கையகப்படுத்தி சென்றுள்ளனர்.