யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிழக்கு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் கட்டைக்காடு கிழக்கு விளையாட்டுக் கழக தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(16.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மருதங்கேணி பொலிஸாரால் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கைது நடவடிக்கை
இதன்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த குறித்த நபரை பொலிஸார் சோதனை செய்தபோது, உடைமையில் 150கிராம் கேரள கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போதை பொருளுடன் கைது செய்யப்பட்டவர், கட்டைக்காடு கிழக்கு கப்பலேந்தி விளையாட்டுக் கழக தலைவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த சந்தேக நபர், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர், கடந்த வருடம் 70கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடல் வழியாக கடத்தி வந்த வேளையில், வெற்றிலைக்கேணி கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலையானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
