அம்பாந்தோட்டையில் துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் ஒருவர் கைது!
அம்பாந்தோட்டை, ஹுங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாமடல பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(18) பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹுங்கம - மாமடல பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
அவரிடமிருந்து ரி - 56 ரக துப்பாக்கி ஒன்று, ரி - 56 ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் 63, போர் 12 ரக துப்பாக்கிகள் 2, போர் 12 ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் 25 மற்றும் ரிவோல்வர் ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் 34 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டது என்று சந்தேகிக்கப்படும் லொறி ஒன்றும் கப் வாகனமும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட லொறி மற்றும் கப் வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக ஹுங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மற்றும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.




